February 25, 2010

ஆரூர் அடை நெஞ்சே!-- 5.



பொங்கழல் வண்ணனைப் புண்ணிய மூர்த்தியைச்
சங்கரி பங்கனைச் சாற்றுக நெஞ்சமே!
வெங்கடல் ஆம்துயர் வற்றிடச் செய்கிற
அங்கணன்மே(வு) ஆரூர் அடை.

துணியாம் பிறையினைச் சூடும் சடையன்
மணியார் மிடறன் வணங்கிடு நெஞ்சே!
பிணியாம் பவமழிக்கும் பெம்மானாம் கங்கை
அணிஅரன்மே(வு) ஆரூர் அடை.

February 23, 2010

ஆரூர் அடை நெஞ்சே! --4.



கண்ணில் உதிரம் கசிந்திடக் கண்டுதன்
கண்ணை இடந்திறைக்குக் கண்ணப்பும் அன்புமனத்
திண்ணற்குத் தன்னுடனே சேர்ந்திருக்க இன்னருள்செய்
அண்ணல்மே(வு) ஆரூர் அடை.

உளிஒலிக் கற்றளி உள்ளத்துள் செய்துக்
களியுறுந் தொண்டரைக் காத்தவன்காண் நெஞ்சே!
ஒளிர்கழல் கூத்தில் உலப்பிலா இன்பம்
அளிஅரன்மே(வு) ஆரூர் அடை.

உலப்பிலா=அழிவிலா

February 20, 2010

ஆருர் அடை நெஞ்சே!--3

எமனைச் சினத்துடன் எற்றி யுதைத்தோன்
கமல மலர்ப்பதம் காத்திடும் நெஞ்சே!
சுமையென்பார் தீவினை சுட்டிடும் நேசன்
அமலன்மே(வு) ஆரூர் அடை.

கொய்யும் மலர்கொடு கும்பிடும் நெஞ்சமே!
பைய உறுவினைப் பையுளும் நீக்குவன்;
துய்யன்சீர் வன்றொண்டர் சுந்தரர் பாடிடும்
ஐயன்மே(வு) ஆரூர் அடை.


பையுள்=துன்பம்

February 17, 2010

ஆரூர் அடை நெஞ்சே!-- 2.

மின்னல் நிகராம் மிடியுடை வாழ்விதில்
பொன்னில் புனைகழல் பூம்பதம் உன்னுக!
தன்னன்பால் யாவும் தடுத்தருள் செய்கிற
அன்பன்மே(வு) ஆரூர் அடை.

சித்தம் தெளிவாக்கும் செம்மை மருந்தவன்
சுத்தி வருவினைச் சுற்றறச் செய்பவன்
நித்தம் அருளால் நிறைந்திடும் என்னெஞ்சே!
அத்தன்மே(வு) ஆரூர் அடை.

February 14, 2010

ஆரூர் அடை நெஞ்சே!

வலையில் பிணிக்கும் மயலுறு வாழ்வில்
நிலையைக் கருதிடும் நெஞ்சே!விலையில்
கலைச்சுடர் கூத்தன் கருணை புரிவான்
அலைச்சடையன் ஆருர் அடை.

சுழலும் சகடச் சுழற்சியில் சிக்கி
உழலும் வினையை ஒழிப்பான்!தழலன்
கழல்வண்ணத் தண்ணளிக் காத்திடும் நெஞ்சே!
அழல்வண்ணன் ஆரூர் அடை.