(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
சிந்தையில் பரமனின் அன்பைத்
...தேக்கிநெக் குருகிடச் செய்யும்
செந்தமிழ் வாசகத் தேனில்
...திகழ்மணி வாசகர் உய்ந்தார்!
அந்தமொன் றென்றிலா ஈசன்
...அருளினை வேண்டிடு வார்கள்
எந்தவொர் ஐயமும் இன்றி
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....1
நீற்றினில் துலங்குவெண் மேனி
...நிலவுடன் சடையினில் கங்கை
ஆற்றினைக் கொண்டவன் தன்னை
...அப்பனென் றடியவர் அன்பால்
போற்றிடும் பாடலுக் கென்றே
...புரிந்திடும் ஆடலைச் செய்யும்
ஏற்றனின் அருள்திறம் கொள்வார்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….2
சுடலையில் நடமிடு பாதம்
...தூதென சுந்தரர்க்(கு) ஏகும்
கடலெழு விடத்தையும் ஏற்கும்
...கருணையில் அமுதெனக் கொள்வான்
குடமிடு சாம்பலும் மங்கைக்
...கோலமாம் படியருள் செய்வான்
இடபனாய் அருள்பவன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….3
நிறைவினை அளித்திடும் தாளை
...நிலையெனும் அடியரின் மெய்யன்
கறையுறு கண்டமும் கொண்டான்
...கரமதில் மான்மழு ஏந்திக்
குறையினைத் தீர்த்துயிர் காக்கும்
...குணநிதி மங்கையொர் பாகன்
இறையவன் புகழ்சொலும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….4
பெரும்பவத் துயரினை மாய்க்கும்
...பிஞ்ஞகன் அருளினை வேண்டி
விரும்பிடும் அடியரைக் காக்கும்
...விகிர்தனின் அருமையென் சொல்ல?
சுரும்புகள் ஆர்த்தெழும் சோலை
...சூழ்தளி மேவிடும் நாதன்
இருங்கழல் பற்றிடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….5
சுரும்பு=வண்டு
தெழிதரும் முழவொடு பம்பை
...திகழுறு விரிசடை யோடே
எழிலுடை நுதல்விழி யானின்
...இணையிலா நடமிடு பாதம்
அழிவினில் ஆழ்த்திடும் ஊழை
...அண்டிடா(து) அருள்தரும்;விண்ணின்
இழிநதி சடையனின் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….6
தெழி=ஒலி.
துன்புடன் இன்பமும் சூழ்ந்தே
...தொடரிரு வினைதரு வாழ்வில்
மன்பதை உலகினை காக்கும்
...வரமெனும் அஞ்செழுத்(து) ஓதி,
"என்பரம் என்கதி நீயே!"
...என்றிட அருளினைக் காட்டும்
இன்பனை வழிபடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….7
காய்ந்திடு சினமெழக் காலன்
...கலங்கிடச் சிறுவனைக் காத்தான்
ஓய்ந்துடல் வீழ்ந்திடும் போதில்
...உறுதுணை எனவரும் ஐயன்
பாய்ந்திடு நதிசடை ஏற்றான்
...பவமதைத் தூர்த்தருள் பார்வை
ஏய்ந்தவன் தாள்தொழும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....8
விரிசடை மேவிடும் கொன்றை
...வெண்மலர் தும்பையும் சூடி
கரியதன் தோலுடை யாகக்
...கண்கவர் நீறணி கோலன்
அரிஅயன் தொழும்தழல் ஆனான்
...அளவிலா அருள்தரும் வள்ளல்
எரிசுடு கானரன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….9
துளியவன் நினைவுகொண் டாலும்
...தொடர்வினைத் தீர்த்திடும் ஈசன்
தளியமை அடியரின் உள்ளம்
...தங்கிடும் அரனுமை நாதன்
ஒளிவெளி நீர்புவி காற்றாய்
...உயிர்களைக் காத்திடும் பெம்மான்
எளியனின் தாள்நினை அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! …10