நஞ்சனகூடு (nanjangud) - மைசூரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் நஞ்சனகூடு என்ற தலம் உள்ளது. தினமலர்த் தளத்தில் தகவல்களையும் படங்களையும் காணலாம்:
http://temple.dinamalar.com/New.php?id=135
(Nanjangud (Kannada ನಂಜನಗೂಡು)
பம்பை உடுக்கை தாளமாய்ப்
...படர்தீ கானில் ஆடிடும்
நம்பன் உனது தாளினை
...நறும்பூத் தூவி சாற்றியே
செம்பொன் மேனி வண்ணனே
...தெம்பு சேர்க்கும் நாமமே
நம்பி .னாருக் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...1
கோளும் தினமும் நன்றுறக்
...கூத்தன் உனையே எண்ணியும்
நீளும் பவமாம் தொடரற
...நிறைவாய்ப் பணியும் அன்புடன்
கேளும் துணையும் நீயெனும்
...கீர்த்தி மிகுதாள் சரணென
நாளும் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...2
பொற்றா ளமதில் ஒலியவள்
...புடையில் பங்காய் ஏற்றவ!
பெற்றார் எனிலுன் அன்பினைப்
...பெற்றார் தாமே புண்ணியர்?
மற்றா ருளரிங் குற்றவர்
...மறைகள் ஓதி இன்புறும்
நற்றாள் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே!....3
குவியும் மலரில் கோத்திடும்
...கோல மாலை சூட்டியே
பவள வண்ணா என்றுனைப்
...பாடி நாளும் வணங்கினேன்
துவியென் றிரண்டாம் வினைதனை
...தூர ஓட்டிக் காவென
நவிலும் அன்பர்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே....4
கீதா குரவர் திருமுறை
...கேட்டு மகிழ்ந்து நடமிடு
பாதா நதியும் மதியுடன்
... பாம்பும் அணிந்த தயைநிறை
போதா ஆலின் கீழமர்
...புனிதா நீயே எம்துணை
நாதா என்பார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே....5
விதியாய் வினையாய் வாட்டியே
....மிரள வைக்கும் துன்பறக்
கதியாய் கழலைப் பற்றியே
....கந்த மலர்கள் தூவியும்
துதியாய் இசையாய் ஆனவா
....தூயா பிறைசேர் சென்னிமேல்
நதியாய் என்பார்க் கருள்செயும்
....நஞ்சன் கூடு கண்டனே....6
உச்சி மீது வெண்பிறை
....உரகம் கங்கை ஏற்றவா
பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா
மெச்சி யோதும் பாடலை
....விரும்பும் உன்னைச் சரணென
நச்சி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....7
வியக்க வைக்கும் ஆடலில்
....விண்ணும் மண்ணும் இன்புறப்
பயக்கும் உன்றன் கருணையை
....பாடிப் பாடி அன்பொடு
தயக்கம் இன்றி உன்னடி
....சரணம் ஐயா என்றுமே
நயக்கும் அடியார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....8
ஓடி செல்வம் சேர்த்திடும்
....உள்ளம் அமைதி கொள்ளுமோ?
வாடி நோகும் வாழ்வினில்
....வரமா யினிக்கும் பேரதே
கூடி இசைந்து பத்தியால்
....கூத்த! உன் தாள் சரணென
நாடி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....9
அவமே தருதீ வினையற
....அன்பர் நாடித் துதிசெய
தவமே உருவாய் அமர்ந்தவன்
....தயையாய் புகலை அளிப்பவன்
'புவனா தார நாதனே
....புனிதா பழமை யானவா
நவனே!' என்பார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....10