June 28, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

 

தானதன தானதன தானதன தானா" என்ற சந்தத்தில்

கண்டமணி நஞ்சுதிகழ் கண்ணுதலை வேண்டி
செண்டுமலர் சூட்டியவன் சேவடியைப் போற்றும்
தொண்டருளளக் கோவிலுறை தூயஒளி யானான்
ஒண்டமிழ்கள் கொண்டுதொழும் ஒற்றிநகர் ஆமே...1

வேதமென தீம்பதிகம் மெய்யடியர் ஓத
நாதமொடு பூங்கழல்கள் நர்த்தனங்கள் ஆட
கோதறுவெண் கூன்பிறையில் கோலமுறு சீலன்
ஓதமலி கின்றதிரு ஒற்றியுறை கோனே...2

தாழியுள என்பினையும் தந்தருளும் பெண்ணாய்
காழியுறை ஆளுடயார் கண்டுகொண்ட தெய்வம்
சூழிடரும் அகலவருள் தோன்றவரும் ஐயன்
ஊழிமுதல் ஆடுமிறை ஒற்றியுறை கோனே....3

முன்னவனும் பின்னவனும் மூலமுதல வன் தான்
இன்னமுத மென்னநஞ்சை ஏந்தியுண்ட வள்ளல்
என்னதுயர் நொந்துறினும் இன்னருளில் உய்ப்பான்
உன்னுமடி யார்க்கருளும் ஒற்றியுறை கோனே....4

சூதுறையும் தீமையழி தூயமலர்த் தாளை
யாதுமவன் என்றடையின் அன்பருளம் ஆள்வான்
போதுமலர் பைம்பொழிலில் பூமதுவை நாடி
ஊதுகிற வண்டுமிகும் ஒற்றியுறை கோனே....5

 

கற்றைசடை நெற்றிவிழி பெற்றதொரு தேவை
பற்றிவிடும் பத்தியினில் இற்றுவிழும் தீமை
குற்றமலி வெற்றுரையைத் துச்சமெனத் தள்ளு
உற்றதுணை யாவர்திரு ஒற்றியுறை கோனே....6

பொத்தியபைங் கூம்பவிழும் பூமலர்கள் தூவி
நித்தியம்செய் பூசனையில் நிர்மலனாய் நிற்பான்
சத்தமிடு செஞ்சதங்கை தந்த இசைக்(கு) ஆடும்
உத்தமநி ருத்தனவன் ஒற்றியுறை கோனே....7

துப்புமவன் உய்ப்பதற்கு வைப்புமவன் என்றே
செப்பரிய முக்கணனை சொற்பதிக மேத்தும்
முப்புரமும் வெப்பெரிசெய் அப்பனவன் ஏதும்
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே....8

வெப்பு = வெப்பம்.

கண்ணுதிரம் பொங்கவவன் கண்ணினையே அப்பி
எண்ணரிய மேன்மைகொளும் திண்ணனவன் தெய்வம்
விண்ணவரின் நற்றுணைவன் வேதனவன் நஞ்சை
உண்டருளும் அண்டனவன் ஒற்றியுறை கோனே....9

கல்லைமலர் ஆகவணி கண்ணுதலை வேண்டி
'எல்லையென ஏதுமிலா இன்னருளே!காவாய்!
தொல்லைவினை தீர்த்திடுக!'என்றவனைக் கெஞ்ச
ஒல்லைவினை தீர்த்தருளும் ஒற்றியுறை கோனே....10.

கழுமலம் அடை நெஞ்சே (சீர்காழி)

 

விளம் புளிமாங்காய் விளம் புளிமாங்காய் - என்ற வாய்பாடு.

மிடிசெயு பவமென்னும் வினைதரும் தளைநீங்கி
விடுபடு நிலைவேண்டில் விழைவொடு அடைநெஞ்சே
கொடிமண மலரோடு குவிமுகை அவிழ்கொன்றை
கடிமலர் பொழில்சூழும் கழுமல நகர்தானே...1.

உயவினை அளிஊழில் உழல்கிற நிலைதீர
நயமுறு நெறிவேண்டி நலம்பெற அடைநெஞ்சே
இயமனை உதைசெய்தே இணையடி தருவானின்
கயலுகள் வயல்சூழும் கழுமல நகர்தானே...2.

உயவு = வருத்தம்.

செவியணி குழையாடச் சிவநட மிடுகோலம்
குவிகரம் சிரம்கொண்டு குரைகழல் நினையன்பர்
புவிபுகழ் தமிழ்பாடப் புகல்தரும் பதியான
கவினுறு பொழில்சூழும் கழுமல நகர்தானே...3.

கிலிதரும் மரணம்தான் கெடுவென வரும்போது
நலிவினை அடையாமல் நலம்பெற அடைநெஞ்சே
புலியதள் உடையானின் புகலடி நினைவாரின்
கலிமலி விழவாரும் கழுமல நகர்தானே...4.

கெடு = தவணை.

சிறையெனு இகவாழ்வில் தெளிவினைப் பெறவேண்டில்
நிறைவினை அளிநாமம் நிலைபெற அடைநெஞ்சே
நறையுறு மலர்சூடும் நவமெனு மணிநீலக்
கறைமிட றுடையானூர் கழுமல நகர்தானே...5.

 

தினமரன் புகழ்பாடி திருவருள் தனைநாடி
மனமொழி செயல்மேவி வழிபட அடைநெஞ்சே
சினமுறு நகையாலே திரிபுரம் எரிசெய்தான்
கனவிடை உடையானூர் கழுமல நகர்தானே....6

எனதென உளவென்றும் இறையவன் அருளொன்றே
தினமொரு முறையாகில் சிவனைஎண் வினைதீரும்
மனதவன் வசமாகும் வழிபெற அடைநெஞ்சே
கனலுமிழ் விழியானூர் கழுமல நகர்தானே....7

புதிர்தனில் விடைதேடும் புரிதலில் புவிவாழ்வில்
எதிர்வரு வினைசெய்யும் இடர்கெட அடைநெஞ்சே
சதிர்தனில் உலகுய்யத் தனிநடம் புரிகின்ற
கதிர்மதி அணிவானூர் கழுமல நகர்தானே...8

தொலைதரு வினைமாய்ந்துத் துகளென அருள்வானின்
சொலமிக சுவைநாமம் துணையென அடைநெஞ்சே
பலவகை மலர்சூடும் பணியினை இடைமீதில்
கலைதரி பெருமானூர் கழுமல நர்தானே....9

தொல்லை = தொலை இடைக்குறை.

இணர்மலர் மதிசூடும் எழில்சுடர் சடையோனை
தணலுறு எரிகானில் தனிநடம் புரிவானை
துணையென இமையோரின் துயர்கெட மதில்மூன்றை
கணைகொடு சுடுவானூர் கழுமல நகர்தானே....10

திருஞானசம்பந்தர் துதி!

அம்மே எனவழுது அன்றுண்டார் ஞானப்பால்
பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
புகழினையேத் தேவாரப் புத்தமுதாய்த் தந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்...1

பொங்கலை வானதிப் பூண்ட சடையனைத்
தங்கரங் கொட்டியே சாற்றுகையில்--எங்கும்
புகழொலிக்க ஈசனிடம் பொற்றாளம் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...2

அல்லும் பகலும் அரனின் நினைவினில்
வெல்லும் எமபயம் மெய்யென்ற-- நல்லன்
சகமிதன்சீர் மேவிடு சம்பந்தன் மாணி
புகலியர்கோன் பொற்றாள் புகல்...3

மழவன் மகள்நோய்தீர் வாடாப் பதிகம்
அழகாய் அருளிய அன்பர்-- குழகன்
உகந்தளிசீர் பல்லக்கில் ஊரும் இளையோன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...4

நாள்களும் கோள்களும் நல்லன எம்மானின்
தாள்தொழும் அன்பர்க்கே சாலுமென்றார்-- வேளை
மிகவிழித்துத் தீப்படச் செய்தான் அடியர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...5

 

திருமடம் தீயரால் தீப்பட நற்பா
அருளி அழலை அணைத்தப் --பெருகும்
தகவதனைப் போற்றிச் சழக்கரை வென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...6.

கலயம் கொளுநீறை கன்னியாய் மீட்டத்
தலமுறு நற்பதிகம் தந்த -- நலத்தர்
நிகரிலியாய் கூத்திடும் நிர்மலன் அன்பர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...7.

யுகமும் கணமும் உருளச் சுழன்றே
இகத்தை இனிதாய் இயக்கி -- உகப்பான்
சிகையில் மதிசேர் சிவனருட் செல்வன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...8.

அருட்கவி அப்பருடன் அன்றுதமிழ் பாடி
திருத்தாழ் திறந்தடைத்த செல்வர்-- விருப்பில்
புகையெரிகான் ஆடிடும் புண்ணியன் மைந்தன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...9.

சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...10.