"மா விளம் மா விளம் மா விளம் விளம்"
என்ற வாய்பாடு - எழுசீர் விருத்தம்.
கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே
ஒலிசெய் பம்பையும் துடிக்கும் தாளமாய்
...உவந்து நடமிடுக் கூத்தனும்
புலியின் தோலினைப் புனைவான் சீரினைப்
...புகழ்ந்துப் பாடியுய் யலாமதே
மலியும் வினைதடுத் தெமைகாக் குங்குடை
...வானம் கூப்பிடு தூரமே....1
மாட்டும் தூண்டிலில் மடியும் மீனெனெ
...மயலில் உழல்கிற நெஞ்சமே
கூட்டும் பத்தியில் கூடும் அடியரின்
...குழுவில் இருந்திடல் பெற்றியே
பாட்டில் ஒளிர்கிற பரமன் பேரினைப்
...பரவி மகிழ்வுற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைகாக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....2
ஊணில் உயிரினில் ஊனில் நிற்பவன்
...ஓங்கும் அழலென ஆனவன்
ஆணிப் பொன்னவன் ஆடல் வல்லவன்
...ஆர்க்கும் மறைபுகழ்ப் பாதனே
வீணில் பிறப்பிதில் மெய்யன் பேர்சொல
...மேவும் சுகம்பெற லாமதே
வாணி கர்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....3
வாள் நிகர்=வாணிகர்
ஆர்க்கும்=ஒலிக்கும்.
நிருத்தம் பயில்பதம் நினைந்து போற்றியே
...நெகிழும் அடியரும் பாடிடும்
எருத்தம் கறையுடை இறைவன் தண்ணருள்
...ஈடில் பேற்றினைத் தந்திடும்
உருத்தி ராக்கமும் ஒளிர்வெண் நீறணி
...உமையின் பங்கனின் பேரதே
மருத்தென் றெமை வினைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....4
மருத்து= மருந்து(வலித்தல் விகாரம்)
எருத்தம்= கழுத்து.
அஞ்ச வருகிற ஆறு வெம்பகை
...அலைக்கத் துயருறு நெஞ்சமே
மஞ்சு சேர்மலை மன்னன் எம்பிரான்
...வரம்தந் தடியரைக் காப்பவன்
தஞ்ச மளிமலர் தாளன் பேரினைச்
...சாற்றி உரைத்திட லாமதே
வஞ்ச வினைவிடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....5
வீணா யுழன்றிட வெருதா கின்றதோ
...வேண்டும் பிறவியில் நெஞ்சமே
காணா உருவிலி காட்சி யாகவே
...காணும் உருவினன் காப்பவன்
பூணாய் எருத்தினில் பொலிவார் பாம்பினை
...பூணும் எந்தையின் பேருரை
வாணா ளதன்பய .னெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....6
நிலையாய் உறுதுணை நிமலன் தாளிணை
...நிதமும் தொழுதிடு நெஞ்சமே
கலைசேர் நிலவுடன் கங்கை சூடிடும்
...கருணைக் கடலருள் செய்பவன்
அலைமேல் எழுவிடம் அமுதாய் உண்டவன்
...அணிசேர் அஞ்செழுத் துரையதே
வலையாய் சூழ்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....7
கொட்டும் முழவொலி குமுறும் பம்பையின்
...கூடும் ஒலியினில் ஆடுவான்
சுட்ட நீறணி சோதி மேனியன்
...துணையென் றிருந்திடு நெஞ்சமே
மட்டுவார் குழல் மங்கை பங்கினன்
...வணங்கி அஞ்செழுத் துரையதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....8
குமுறுதல்= அதிர்வொலிசெய்தல்.
சுற்றாய்ச் சுழல்கிற சுமைசேர் வாழ்விதில்
...சுகமே அவனருள் நெஞ்சமே
செற்றான் முப்புரம் தீயில் வெந்திடத்
...தேவர் தொழுதிடும் நம்பனே
சற்றா யினுமவன் தாளை எண்ணியே
...சாற்றும் அஞ்செழுத் தாமதே
வற்றா பவம்தடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....9
கண்டம் கறைபட கடலின் நஞ்சுணும்
...கருணை போற்றிடு நெஞ்சமே
தொண்டர் தம்பிரான் தூய அன்பினில்
...தோன்றாத் துணையெனக் காப்பவன்
துண்டு பிறையினை சூடும் எம்பிரான்
...துய்ய அஞ்செழுத் தோததே
மண்டு வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....10