அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு.
நீர்க்கண் குமிழாம் வாழ்வுதனில்
...நிமலன் மலர்தாள் நற்றுணையாம்
தீர்க்கும் வினைசெய் துன்பினையே
...சிறந்த மருந்தென் றாகிடுவான்
பார்க்குள் கருணை வாரிதியாம்
...பரமன் வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....1
நோக்கும் பார்வை அருளாகி
...நோய்செய் வினையைத் தீர்த்திடுமே
தீக்குள் வெம்மை ஆகிடுவான்
...தீயின் ஒளியாய் ஒளிர்கின்றான்
காக்கும் ஐயன் தாளிணையைக்
...கருதும் அடியார் துன்பினையே
போக்கும் பரமன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே.. ..2
நாக்கும் உரைக்கும் நாமசுவை
...ந்விலுந் தோறும் இனிதாகும்
தூக்கும் மலர்தாள் தொழுமன்பர்
...துணையாம் நீல மணிகண்டன்
ஆக்கும் அளிக்கும் அழிசெய்தே
...அருளு மீசன் அமர்கோவில்
பூக்கும் நந்த வனம்சூழும்
...புள்ளி ருக்கு வேளூரே....3
தேரே றியருள் செய்யுமரன்
...சீரேர் விழவில் உலாவருவான்
தூரே மலியும் உள்ளந்தனை
...தூய்மை யாக்கும் தாளிணையை
ஓரே .னெனையும் காத்திடுவான்
...உமையின் பங்கன் செஞ்சடையன்
போரே றேறி அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....4
நோவாய் வினைசெய் துன்பகலும்
...நுவலும் அஞ்சக் கரத்தாலே
நாவா யாகக் கரைசேர்க்கும்
...நம்பன் மலர்தாள் பற்றிடவே
பாவாய்ப் பண்ணாய் அடியார்கள்
...பரவும் கருணை வாரிதியாம்
பூவார் சடையன் அமர்கோவில்
... புள்ளி ருக்கு வேளூரே....5
சீத வெள்ளிப் பனியிமயச்
...செல்வன் வேண்டும் அன்பருக்கே
பாத மலரைத் தந்தருளும்
...பரமன் தயையின் வடிவாகி
ஏத மிகுவெவ் வினைத்துன்பாம்
...இன்னல் தீர்க்கும் மருந்துமவன்
பூதப் படையான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....6
ஏற்றும் சிறுவன் உயிர்காக்க
...இரக்கம் மிகவும் கொண்டவனாய்க்
கூற்றும் மாள உதைசெய்யும்
...கோபம் கொண்ட கூத்தனவன்
சாற்றும் வேதப் பொருளாவன்
...தஞ்ச மென்றே அடியார்கள்
போற்றும் பெருமான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....7
"தொன்மை தொடராய்த் துன்பதுவாய்ச்
...சூழும் வினைகள் தீர்ந்திடவே
நின்மெய் யருளைத் தந்திடுவாய்!
...நிமலா வேண்டித் தொழுகின்றேன்!
என்மெய் யுடைமை நீயன்றோ!"
...என்றே தஞ்ச மடைவாரின்
புன்மை தீர்ப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....8
சோதித் தருளும் அண்ணலவன்
...துணையாய் காக்கும் சுற்றமவன்
பாதித் தன்மெய் யுமையோடும்
...பால்தந் துசிசுப் பசிதீர்ப்பான்
ஓதித் துதிசெய் வேதமறை
...உணர்த்தும் பொருளை ஆலமர்ந்தே
போதித் திருப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....9
வீசு தென்றல் வெய்யிலினில்
...வெகுவாய் சுகமே தருதல்போல்
பேசும் அவன்பேர் வினைநீக்கிப்
...பேறாய் இன்பம் தந்திடுமே
மூசு வண்டார் மலர்சூடும்
...முதல்வன் மூலன் மணசாந்தம்
பூசும் மார்பன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....10