October 29, 2011

'மனம் போன போக்கில்'

(அறுசீர் விருத்தம்-4 மா +'மா-கருவிளங்காய்/விளம்-கூவிளங்காய்'-வாய்பாடு.

சுடரும் முக்கண் தெய்வ மான சுந்தரன் தம்மடியார்
படரும் அன்பில் பண்ணார் பாடல் பைந்தமிழ் ஆரமிட்டார்
இடையில் கச்சாய் பாம்பும் வெம்மா ஈருரி மேனிதனில்
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யலுண்டே....1

பெய்யும் மாரி யாக வந்தே பேரருள் செய்திடுவான்
தையல் பங்கன் தஞ்சம் வேண்டின் தன்னையே தந்திடுவான்
மெய்யி தென்றே மாய மலக்கில் வீழ்ந்திடு மாந்தரைப்போல்
தொய்ய வேண்டா முக்கட் செல்வன் துணையடி போற்றுநெஞ்சே....2

 

நஞ்சை உண்ட நீல கண்டன் நம்பன் கழலிணையை
விஞ்சும் அன்பில் தஞ்சம் என்றே வேண்டின் உதவிடுவான்
கொஞ்சு செஞ்ச தங்கை பாதம் கொண்டவன் தண்ணருளால்
எஞ்சல் இன்றி வினைகள் ஓடி இன்பம் நிலைத்திடுமே....3

உலைசெய் துன்பம் கொள்ளாய் நெஞ்சே உய்வை வேண்டுதியேல்
சிலைஎய் வேளை கோபம் தோன்ற சிரித்து விழித்தவனாம்
மலையன், கானில் ஆடும் கூத்தன் மழுவாட் படையுடையான்
கலையொன் றேந்தி கழலி ணையைக் கருது தினந்தொறுமே....4

உலை=சஞ்சலம்,சிலை=வில்.

 

எருதின் மீத மர்ந்தே ஈசன் எழிலாய் வலம்வருவான்
அருவ மாக இருவர் தேட அழலாய் அருள்பவனாம்
உருவ னாக அன்பர் உளத்தில் உறையும் பரசிவனாம்
பொருது வினையைப் போக்கும் அரனைப் போற்றி மகிழ்மனமே....5

இகழும் நிலையில் வைக்கும் வினைசெய் இடரது தீர்ந்திடவே
முகிழும் அன்பில் பத்தி மலர மூலனை எண் மனமே
நிகழும் யாவும் நலமே யாக நின்மலன் தாளிணையைத்
தகழி ஏற்றி மலர்கள் தூவிச் சாற்ற வரும்திருவே....6

 

இருள ளித்து மருளில் சேர்க்கும் இழிவினை நீக்கியென்றும்
அருள ளிக்கும் பார்வை தன்னில் அபயம் தருமிறைவன்
பொருள ளிக்கும் வாழ்க்கை என்றால் பூரணன் போற்றியவன்
இரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே...7

கனைத்த ழைக்கும் கன்றைப் பரிவாய்க் காத்திடும் தாய்ப்பசுபோல்
நினைத்த ழைக்கும் அன்பர் தமக்கு நிமலன் அருளிருக்கும்
வனத்தில் அன்று பார்த்தன் தனக்கு வரமெனப் பாசுபதம்
தனைக்கொ டுத்த ஈச .னாரைச் சார வருசுகமே...8

 

புகலற் கேலா வினைசெய் துன்பப் புயலுழல் வாய்மனமே
சகலத் திற்கும் காரண .னானத் தற்பரன் அருள்தருவான்
நகசத் தோலை உடையாய் அணிவான் நறுமலர் மாலைகள்சேர்
அகலத் தையன் அகலா திருப்பான் அகன்றிடும் ஆரிருளே...9

நகசம்=யானை.
அகலம்=மார்பு.


உருளும் சகட வாழ்வில் நிலைக்கும் உத்தி அறிமனமே
மருளில் ஆழ்த்தும் பொருளி லாத மலக்கினை நீக்குபவன்
சுருளும் சடையில் பிறையும் நதியும் சூடித் திகழ்பவனாம்
ஒருவன் அன்பின் உருவன் நாமம் ஓதில் அறுவினையே...10

October 10, 2011

என்பணிஅரன்துதி !

'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' - அறுசீர் விருத்தம்;
மாச்சீர் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்;
(1-3-5 சீர்களில் மோனை)


கொய்த நாண்மலர் கோத்தெழில் மாலைகள் குலவியே தோள்சேரும்
பைதல் வெண்பிறை பாயலை கங்கையைப் பாந்தமாய் சடையேற்பான்
வெய்தி டர்தரு வினைச்சுழல் மீட்பவன் விண்திரி புரமூன்றை
எய்தெ ரித்திடும் இறைத்துதி என்பணி இனியிலை இன்னாவே....1

பைதல்=இளைய
குலவுதல்=விளங்குதல்.

கரவு நெஞ்சமாய் கணந்தொறும் பொய்யினைக் கழறிடும் என்னாவே
பரவு வெவ்வினை படுவழி அறிகிலை பறைதிநான் என்னாவேன்
உரவு நீர்சடை உற்றவன் ஓங்குதீ ஒளியவன் எரிகானில்
இரவு செய்நடம் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே!....2

உரவுநீர்=ஆறு என்னும் பொருளில்.

 

அடமும், பேதுடை அறிவிலாப் புன்மொழி அறைகுவை என்னாவே
தொடரும் வல்வினை தொலைவழி அறிகிலை சொல்லுநான் என்னாவேன்
விடமும் உண்ணுவான் விண்ணவர் துணையவன் வெண்ணிறப் போரேறாம்
இடபம் ஏறிறை ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....3

அடம்=பிடிவாதம்
பேது=துன்பம்.

கடுக டுப்பொடு கருணையில் லாவசை கழறிடும் என்னாவே
கொடுவி னைத்துயர் குறையவொன் றுரைத்திலை கூறுநான் என்னாவேன்
சுடுமி ருட்கடம் சூழெரி நடசிவன் தொடர்முடைக் கையேந்தி
இடுப லிக்கலை இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....4

கடம்=காடு.

 

பண்ணி யச்சுவை பலவகை உண்டெனப் பகர்ந்திடும் என்னாவே
எண்ணி டாவினை இடரற அறிகிலை இசைத்திடு என்னாவேன்
வெண்ணி லாத்துளி மின்னொளிர் செஞ்சடை விமலனை அன்போடே
எண்ணில் நாமமும் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....5

பண்ணியம்=பலகாரம்,
இசை=உரை.

ஒன்று நன்றையும் ஓர்கிலை உய்வழி உரைத்திலை என்னாவே
தொன்று செய்வினை தொடரற மொழிகிலை சொல்லுநான் என்னாவேன்
அன்று தில்லையில் ஆடிய பாதமே அடியரின் பற்றாகும்
என்றும் உள்ளமெய் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....6

 

பறப்பில் தேடுவை பணந்தனை பரிவினை பகர்கிலை என்னாவே
திறப்பி தென்னவே சிவனடி நினைந்திலை செப்புநான் என்னாவேன்
பிறப்பில் லாதவன் பிணிபவந் தொலைப்பவன் பெண்ணுமை பங்கேற்றான்
இறப்பில் லாதவெம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....7

பறப்பு=துரிதம்.
திறப்பு=திறவுகோல்.

வசையும் திட்டுமாய் வார்த்தையில் சுடுமொழி வழங்குவை என்னாவே
பசையென் றூழ்வினை பற்றறும் வழியிலை பகர்வைநான் என்னாவேன்
தசமென் றேசிரம் தாங்குமி லங்கைகோன் அழுதுமே கானம்செய்
இசையைக் கேட்டஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....8

 

கொழுந்து வெற்றிலைக் கூட்டுடன் விருந்துணக் கோருவை என்னாவே
விழுந்து போம்படி வினையற அறிகிலை விளம்புநான் என்னாவேன்
விழுங்கு நஞ்சதும் விண்ணமு தாயயன் விட்டுணு தாம்தேட
எழுந்த சோதிஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....9

வெற்றிலைக்கூட்டு=சுண்ணாம்பு,பாக்கு,இத்யாதி.
விளம்பு=சொல்லு.

கூழை என்னவே குறைமலி மொழியினைக் கூறிடும் என்னாவே
பாழை யாய்மயல் படரற உரைத்திலை பகர்திநான் என்னாவேன்
மாழைப் பொன்னவன் மாசிலா மணியவன் மறையவன் என்றென்றும்
ஏழை பங்கினன் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....10

படர்=துன்பம்.,கூழை=புத்திக்குறைவு,
பாழை=மாயை,மயல்=மயக்கம்.