"மா புளிமாங்காய் மா புளிமாங்காய்" - வாய்பாடு.
புளிமாங்காய்ச்சீர் வரும் இடத்தில் சில சமயம் கூவிளமும் வரலாம்.
புயலென் றிடர்தன்னைப் போக்கும் பிறைசூடி
பெயலில் உலகுய்க்கும்; பேறாய் அடைநெஞ்சே
கயல்கள் குதித்தோடும் கால்வாய் வழிந்தோடும்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே...1
பெயல் = மழை.
பாலன் தனக்காகப் பரிந்தே உதைசெய்து
காலன் தனைச்செற்ற காலன் அடைநெஞ்சே
காலை பொழுதாகக் கானக் குயில்பாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே...2
வெளிர்தண் பொடிபூசும் விடையூர் பெருமானை
மிளிர்கண் ணுதலானை வேண்டி அடைநெஞ்சே
அளிசெம் மலர்மேவி ஆர்க்கும் பசுஞ்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே...3
அளி = வண்டு.
இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் தாள் இறைஞ்சி அடைநெஞ்சே
பொங்கார் சிறைவண்டு போதில் இசைபாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே...4
போது = மலர்.
மொக்காய் மலராகி முதிர்ந்து வருமன்பில்
சிக்கா திருப்பானோ தேடி அடைநெஞ்சே
மிக்கார் அளிகூடி மிழற்றும் மலர்ச்சோலை
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே....5
பாதி மதியானின் பாத மலர்தன்னை
ஓதி துதிபாடி உருகி அடைநெஞ்சே
சோதி யவன்பேரைச் சொல்லி வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே....6
நீறு திகழ்மெய்யன் நீல மணிகண்டன்
ஆறு தலையோனென் றறைந்தே அடைநெஞ்சே
ஊறும் மதுநாடி ஒலிசெய் மலர்வண்டாய்
கூறும் அடியார்சேர் கோடி காவையே...7
தலையில் சுடர்கொன்றை தண்ணார் நதியேந்தும்
மலையன் மறையோன் தாள் வணங்கி அடைநெஞ்சே
அலைசெய் மருதம்சூழ் அணியார் பசும்பொற்பூங்
குலைகள் மலி சோலைக் கோடி காவையே...8
மருதம் = மந்தமாருதம், தென்றல்
ஈடும் இணையென்றும் இல்லா இறையோனைப்
பாடும் இசையாலே பரவி அடைநெஞ்சே
ஆடும் நடராசன் அலர்தாள் சிரம்சூடிக்
கூடும் அடியார்சேர் கோடி காவையே...9
மத்தா யுழல்வேனை வாட்டும் வினைதீர
அத்தா எனையாளென் றணுகி அடைநெஞ்சே
முத்தா டிடுமாப்போல் முரன்றே அளிபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே...10