March 19, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)

 

(1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர் அமைந்து வரப் பெற்றது)

('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

பொழுதாம் விடியல் எழுஞா யிறுபோல
எழிலார் சுடராய் இலகும் தழல்மேனி
குழுவா யடியார் குவிவார்க் கருள்செய்வான்
மழுவாட் படையன் கயிலை மலையானே....1

சங்கம் வளர்செந் தமிழில் திருப்பாடல்
திங்கள் அணியாய்த் திகழும் சடையானின்
பொங்கும் அருளைப் புகழும் இசையேற்பான்
கங்கை அணிவான் கயிலை மலையானே....2

செவ்வாய் சிரிப்பில் திகழும் குழகன் தான்
எவ்வா றுமவன் இரங்கும் இறையாவான்
அவ்வா றுவகை அவல நிலைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே....3

காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் என்னும் ஆறுவகை எதிரிகள்.

தூக்கும் திருத்தாள் தொழுவார்க் கிடர்செய்துத்
தாக்கும் வினைகள் சரிய விழியன்பில்
பூக்கும் அரனற் புதன் தன் நிகரில்லான்
காக்கும் கடவுள் கைலை மலையானே....4

உயவுற் றரக்கன் விரலால் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையைச் செவியாழன்
றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே....5

செவி+ஆழ்+அன்று
உயவு=வருததம்.
இயம்=வாத்தியம்.

ஆழ்=ஈடுபாட்டுடன் ஆழ்ந்து.

இராவணன் அகம்பாவத்தில், கைலைமலைப் பெயர்க்க முயல்வதை அறிந்த ஈசன், தன் கால் விரலாலழுத்த, இராவணன் நெருக்குண்டு வருந்தி சாமகானம் இசைத்தான். ஈசன் ,அந்த கானத்தில் ஈடுபட்டு, சந்திரஹாசம் எனும் வாளை அளித்தார்.

 

வெள்ளிப் பனியாய் விளங்கும் மலைமன்னன்
துள்ளும் நதியைச் சுமக்கும் சடைகொண்டான்
கொள்ளும் தயையில் கொடுக்கும் அருளின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே....6

மறைஆர் திருமா மதுரை நகர்தன்னின்
இறையாய்க் கொலுவில் இனிதாய் அருளீந்தப்
பிறைஆர் சடையன் பலவே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே....7

நிலையாய் கதியாய் நிழலாய் எளியோர்க்காய்
இலையே துயரம் எனவே அருளீவான்
அலையார் நதியோ(டு)அராகு ரவம்சூடி
கலைமான் கரத்தன் கைலை மலையானே....8

விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துநிகர் எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைதன் கரம்கொண்டான்
கரைசேர்த் திடுவான் கைலை மலையானே....9

விதிசெய் தளையை விலக்கும் இறையோனை
துதிசெய் பவரின் துணையாய் வருமீசன்
நிதியன் அருள்வான் நிகரில் பரிவோடு
கதியைத் தருவான் கைலை மலையானே....10

March 06, 2012

திருக்கூடலையாற்றூர் !

 

கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே....1

மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே....2

நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே....3

தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே....4

கான்=காடு


பல்வகை நிலைகாணும் பத்திசெய் வழிதன்னில்
வெல்வழி இறைதாளை விட்டிடா நினைவாகும்
வல்வினை அகன்றோடும் வாழ்வினைத் தருமீசன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே....5

 

வார்சடை அதன்மீது வான்மதி அணிவான்தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே....6

வெஞ்சினம் எழவேளை விழித்தெரி படச்செய்தான்
நஞ்சணி கறைகண்டன் நற்றவ குருவாகி
அஞ்சலென் றருள்செய்து அடைக்கலம் தருமீசன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே....7

காளமும் அமுதென்றுண் கறைமிட றுடையானும்
நீளவெந் துயர்செய்யூழ் நீங்கிட அருள்தந்துத்
தூளவை யெனதீர்க்கும் தொண்டரின் துணையாவான்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே....8

எங்குளன் இறைவன் தான் என்றவன் அருள்தேடின்
தங்குவன் உளம்தன்னில் தாங்கிநம் வினைதீரப்
பொங்கிடும் தயைசெய்வான் பொலிவுறும் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே....9

நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான்
ஆற்றினை பிறைதன்னை அழகுடை சிரம்கொண்டான்
சீற்றமும் மிகவன்று சிறுவனுக் கருள்செய்யக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே....10

March 03, 2012

திருமழபாடி

 

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"

வலைமீ தினிலே.. படுமீனாய்
...வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...1

துளிவான் நிலவோ..டலையாறும்
...சுருளார் சடைமேல்.. அணியாகி
வெளியே சிவனா.. டிடுமேடை
...விரையார் கழலோன்..நடமாகும்
தளியே அடியார்.. மனமாகும்
...தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன்
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....2

 

பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3

பணி = பாம்பு

பொடி = சாம்பல்

மதவேள் = செருக்குள்ள மன்மதன்.

செடியா யடர்தீ .. வினையாலே
...தெளிவே துமிலா .. துழல்வாரும்
நொடியே அரனா.. மமதோதில்
...நுதலார் விழியோன் .. புகலாவான்
துடியா ரிடையா .. ளுமைநாதன்
...துணையா யிணைதாள் .. தருமீசன்
அடியார் திரளூர் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....4


தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

 

நலமே விளைவாய் .. அடைநெஞ்சே
...நடுவாய் விதையாய் .. இறைநேசம்
நிலைபே றுடையான் ..நினைவாகின்
....நிறைவாய் இனிதாய் .. வருவானே
தலையோ டதிலே .. பலிதேர்வான்
....தழலாய் மலையாய் .. அருளீசன்
அலைகா விரிபாய் .. மழபாடி
....அகலா துறைமா .. மணிதானே....7

நறைசேர் மணமோ.. டலர்பூவை
...நவமாய் சரமாய் அணிவானே
கறைசேர் மிடறோன் .. பிறைசூடி
...கழலே சரணாய் .. அடைவாரின்
குறையே கிடவே .. வருமீசன்
...குணமா நிதியாம் .. குருநாதன்
அறைஆர் புனல்பாய்.. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....8

நறை=தேன் என்னும் பொருளில்.

 

சகியா இடராய் .. வினைசூழின்
...சரியா மனமே .. தருவானே
துகிலா யதளே .. உடையானின்
...துதிசேர் இசையே..இனிதாகும்
முகிலார் பனிமா .. மலைநாதன்
...முழவார் ஒலிசேர் .. நடராசன்
அகிலார் புகைசூழ் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....9

சகியா = தாங்கொணாத,

விழவார் கொலுவாய்.. எழிலாக
...விடைமீ தமர்வான்.. அருள்நாடிப்
பழமோ டலர்மா.. மலராலே
...பதமே தொழுவார்.. பதியாவான்
தழலா டிடுவான்.. எரிகானில்
...தவமே உருவா..கியமோனி
அழகார் தலமாம்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....10

March 02, 2012

திரு ஆனைக்கா !

 

(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")

இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் உய்வாய் புகல்கொள் நெஞ்சமே
தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே....1

இரிந்திட= சாய
தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்
விளித்து நினைந்து வேண்டு நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி
அளித்த அண்ணல் ஆனை காவையே....2

 

பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்
அன்புற் றிறைஞ்சி அடைக நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே....3

வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்
செம்மை நிலையுறச் சேர்க நெஞ்சமே
தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே....4

 

சுழலார் வினைசெய் துன்பில் சிக்கியே
உழலா தடைய உரையென் நெஞ்சமே
கழலார் பாதன் கனகக் கொன்றையன்
அழலார் விழியன் ஆனைக் காவையே....5

வலையில் மீனாய் வதைசெய் வெவ்வினை
இலையென் றடைய இறைஞ்சு நெஞ்சமே
தலைவன் மலர்பூந் தாளை காவிரி
அலைகொண் டேத்தும் ஆனை காவையே....6

 

மாறு படுமிவ் வைய வாழ்வினில்
தேறு தலுற சேர்க நெஞ்சமே
வீறு கொண்டு வேக மாய்விழும்
ஆறு சூடி ஆனைக் காவையே....7

இடுக்கண் தீர எய்து நெஞ்சமே
திடுக்கிட் டதிர சிமைய வெற்பினை
எடுக்க முயன்ற இலங்கை மன்னனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே....8

 

இரியும் இன்னல்; இடர்செய் வல்வினை
சரிய எண்ணில் சாற்று நெஞ்சமே
உரியன் அன்பர்க்(கு); உன்னா தார்க்கவன்
அரியன் உறையும் ஆனைக் காவையே....9

சாற்று=சொல்லு.

வெந்து யரற விழைக நெஞ்சமே
சிந்தை சிவமாய்த் திகழ்பேய் அம்மையை
அந்த மிலன்பில் அன்னை யேஎனும்
அந்தி வண்ணன் ஆனைக் காவையே....10