('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - என்ற வாய்பாடு)
துயிலும்நிதம் விழிப்பும்தொடர் நிலையாகிடும் உலகில்
மயலில்வரும் இடர்நீங்கவும் துதிசெய்திட அருள்வான்
மயிலும்நடம் இடும்பூம்பொழில் தனில்பாடிடும் குயில்கள்
பயிலும்திருப் பழனத்தரன் பாதம்பணி மனமே … 1
வாடும்படி மிகுதுன்பினைத் தரும்வெவ்வினை தீர
ஆடும்பதம் நாளும்பணி பவர்க்கேயருள் செய்வான்
மூடும்புனல் மலராலெழிற் மிகச்சூழ்ந்திட வண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே … 2
புத்தித்தடம் விலகித்தடு மாறும்நிலை மாறும்
சித்தத்தெளி வினுக்கோர்வழி புகல்வேனது கேளாய்
தித்தித்திடும் திருப்பேருடை சுத்தத்தவன் போற்றி
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே … 3
ஓலத்திரை கடல்சூழ்ந்திடும் புவிமீதுறு வாழ்வில்
காலத்திடர் செயும்வெவ்வினை தீர்க்கும்தயை கொண்டான்
சூலப்படை உடையான் தன(து)அடியார்களின் துணையாய்ப்
பாலித்தருள் பழனத்தரன் பாதம்பணி மனமே … 4
அலையும்மனம் அடங்கும்வழி மொழிவேனது கேளாய்
தலையில்பிறை சூடும்சிவன் கழல்போற்றிட அருள்வான்
உலவும்வளி தவழ்பூம்பொழில் மணம்வீசிடும் கொடிகள்
பலவும்திகழ் பரனத்தரன் பாதம்பணி மனமே … 5
ஒலியென்றனை தாளந்தனில் இசைவாளவள் காந்தன்
பொலிவொன்றிய ஒளிவீசிடும் திருவாகிடும் உருவன்
நலிவின்றிட அடியாரிடர் தீர்க்கும்தயை நிதியாய்ப்
பலிகொள்பவன் பழனத்தரன் பாதம்பணி மனமே … 6
அனை=அன்னை,இடைக்குறை
பொலிவு+ஒன்றிய=பொலிவொன்றிய
சுடரேந்திடும் நுதல்கண்ணினன் முழவோடதிர் துடிசெய்
நடையேந்திடும் திருவாடலில் அடியார்க்கருள் செய்வான்
சடையேந்திய மலர்கொன்றையில் மிளிர்வான்கரம் மழுவாட்
படையேந்திய பழனத்தரன் பாதம்பணி மனமே … 7
சேர்க்கும்நெறி கூட்டும்அடி யவர்க்கேஉயர் அன்பை
வார்க்கும்விழி நுதலோன்கழல் தொழவேவினை மாயும்
போர்த்தவ்வெழில் வனத்தில்கடும் தவமேசெய கணையை
பார்த்தற்கருள் பழனத்தரன் பாதம்பணி மனமே … 8
மண்ணாகிடும் யாக்கைக்கொரு நலம்சேர்வழி சொல்வேன்
பெண்ணோரிடம் கொண்டானவன் கழலேதுணை என்றே
"கண்ணா!கறைக் கண்டா!எமக் கருள்வாய்!"என வேண்டிப்
பண்ணார்பொழில் பழனத்தரன் பாதம்பணி மனமே … 9
தீங்கற்றிடும் உயர்வாழ்வினைத் தருவான்கழல் நாடி
ஓங்கித்திகழ் அழலோன் திருப் புகழ்பாடிட அருளும்
பூங்கொத்துகள் உதிர்ந்தேபுனல் ஆடும்கவின் பொன்னி
பாங்கர்த்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே … 10