(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு. ஒரோவழி காய்ச்சீர் வருமிடத்தில் விளம்/ மா வரும். அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
துள்ளலைகள் அலைக்கின்ற துரும்பைப் போல
...துயரலைக்கும் வினையெல்லாம் மாற வேண்டில்
அள்ளியருள் வழங்குகின்ற ஐயன் தன்னை
...அஞ்சனவேல் விழியன்னை வணங்கும் தேவை
வெள்ளிநிலாச் சூடுகின்ற விடையன் தன்னை
...விந்தைமிகு ஆடலினை நடிக்கும் வேந்தை
தெள்ளுதமிழ்ப் பதிகத்தால் குரவர் போற்றும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....1
தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....2
தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....3
தெம்பழிசெய் ஊழ்வினையை விரட்டவேண்டில்
...சித்தமெல்லாம் சிவமாக உய்விப்பானை
வம்பலரார் சிலைமதனை எரிசெய் தானை
...வார்சடையில் மதிசூடும் அண்ணல் தன்னை
அம்பலமே நடிக்கின்ற மேடை யாகி
...ஆடலிலே உயிரனைத்தும் புரக்கின் றானைச்
செம்பரமாய் இலங்குமம்மை அப்பன் தன்னைத்
...திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....4
செம்பரம்=செம்பொருள்
நாகா பரணமணி நாதன் தன்னை
...நயமாய்ப் பொற்சபையில் நடம்செய் வானை
வாகா யுமையம்மை வாமத் தானை
...வருத்து மூழ்வினையை மாற்று வானைப்
பாகா யினிக்கின்ற பரனின் பேரைப்
...பாட்டால் பரவுமன்பர் பற்றும் கோனை
சேகார் நிறச்சடையன் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே.... 5
சேகு=செம்மை
தாய்வழியில் வெள்ளத்தால் தவித்து நிற்கத்
...தாயாகப் பெண்ணைவந்து காத்தான் தன்னைப்
பேய்வடிவ அன்னையினைப் பெற்றான் தன்னைப்
...பித்தனென்ற சுந்தரர்க்குத் தூதா .னானைக்
காய்வினையைத் தீர்க்கின்ற கழலன் தன்னைக்
...கரியுரியை உடுத்தவனைக் கதியா வானைச்
சேய்மையனாய் அண்மையனாய்த் திகழ்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....6
மொய்குழலாள் உமைபங்கன் முக்க ணானை
...மூலவனாம் பூரணனை முதல்வன் தன்னைப்
பெய்கிறவான் மழையவனைப் பிட்சாண் டானைப்
...பிறைமதியைச் சூடுவானைப் பெம்மான் தன்னைக்
கொய்தமலர் தூவுமன்பர் குறைதீர்ப் பானைக்
...கோதில்லா குணநிதியைக் குழகன் தன்னைச்
செய்வினையின் துன்புதன்னைத் தீர்க்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....7
ஆர்த்தவனை நாகத்தை அரைக் கச்சாய்
...ஆராத அன்பினிலே அடியார் தம்மை
ஈர்த்தவனை வெள்ளைநிற இடபத் தானை
...இன்னமுதாய் நஞ்சையுண்ட எம்மான் தன்னைப்
பார்த்தவனை மதனெரியால் படவைத் தானைப்
...பரிவுடனே உமையாளைப் பங்காய் ஆகம்
சேர்த்தவனை செஞ்சடையில் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....8
அங்கயற்கண் அம்மையுறு ஆகத் தானை
...அடலேறு தனிலமரும் அண்ணல் தன்னைத்
திங்களுடன் கங்கையையும் சிரமேற் றானைச்
...தென்மதுரை தனிலாடல் செய்தான் தன்னை
வெங்கடத்தில் இரவாடும் மெய்யன் தன்னை
...வீதியுலா வருகின்ற விமலன் தன்னை
செங்கமலத்(து) அளிமுரலும் தடங்கள் சூழும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....9
வைதிடினும் ஏசிடினும் வஞ்ச மின்றி
...வாழ்வருளிக் காக்கின்ற வள்ளல் தன்னை
மெய்ம்மையெனும் அன்புருவாய் மிளிர்வான் தன்னை
...மெய்யடியார் குறைதீர்க்கும் விடையன் தன்னைக்
கைலைதனின் மன்னவனாய்க் காணும் தேவைக்
...கைத்தலத்தில் அழலேந்திக் காப்பான் தன்னைத்
தெய்வமென நம்பிடுவார் தெளிவா வானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....10