(மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு)
அழுது நெகிழ்வர்க் கணுக்கன் மதிசூடி
தொழுது மகிழத் துணையென் றருளூராம்
எழுமின் னிசையை ஏந்தித் தவழ்தென்றல்
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....1
அணுக்கன்=அண்மையில் இருப்பவன.
பொங்கும் அழலாய்ப் பொலியும் மலைஈசன்
பங்கம் தீர்த்துப் பரியும் அருளூராம்
தெங்கின் கீற்றில் செழுமைக் கிளியாடித்
தங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....2
தீங்கும் அழிப்பான் சீரார் மணிகண்டன்
தேங்கும் அன்பில் தேடி அருளூராம்
ஓங்கும் மரங்கள் உயர்ந்து முகில்மோதித்
தாங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....3
துவள வருமூழ்த் தொலைக்கும் குருநாதன்
பவள வண்ணன் பத்தர்க் கருளூரான்
தவளை ஒலிக்கச் சாரல் சொரிமேகம்
தவழும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....4
சடையன் முடையார் தலையில் பலிதேரும்
நடையன் துதியில் நனைந்தின் பருளூராம்
தடையின் றுயர்ந்த தருக்கள் முகில்மேவித்
தடவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....5
நாவும் மொழியும் நம்பன் திருப்பேரை
பாவும் பாடப் பத்தர்க் கருளூராம்
கூவும் குயில்தேன் குரலில் மகிழ்மந்தி
தாவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....6
சேரும் வினையைத் தீர்க்கும் அருளாளன்
ஊரும் விடையன் உறுநர்க் கருளூராம்
தேரும் சுவையின் தேனார் மலர்வண்டுச்
சாரும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....7
சித்தம் தெளியும் செம்மை மருந்தான
அத்தன் அன்பால் அடியர்க் கருளூராம்
பத்தர் பரவும் பாவை நிதம்கேட்கும்
தத்தை தமிழ்சொல் சண்பை நகர்தானே....8
வாமம் தன்னில் மங்கை யுடையானின்
நாமம் பலவும் நவில்வர்க் கருளூராம்
தூமென் மலர்த்தேன் சுவைக்கும் அளிகூடிச்
சாமம் பாடும் சண்பை நகர்தானே. ...9
தாயும் ஆன தந்தைக் கழலெண்ணித்
தோயும் அன்பில் தொழுவர்க் கருளூராம்
பாயும் சிட்டுப் பற்றும் கொடியாடச்
சாயும் பொழில்சூழ் சண்பை நகர்தானே. ...10