December 27, 2012

இலம்பையங்கோட்டூர்


('விளம் விளம் காய்'- என்ற அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் -1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


வார்சடைமீதொளிர்மதியுடையான்
சீர்மிகுபேர்தொழும்அன்பருளம்
சார்பவன்உறைவிடம்தண்பொழில்சூழ்
ஏர்மலிஇலம்பையங்கோட்டூரே....1

விழிநுதல்உடையவன்வெவ்வினைசெய்
பழியினில்தொடரிடர்ப்பார்த்தருளைப்
பொழிகுவன்உறைவிடம்பூஅளியார்
எழில்பொழில்இலம்பையங்கோட்டூரே....2

கரும்பினைகரம்கொளும்காமாட்சி
விரும்பிடும்ஈசனும்வேண்டுவதைத்
தரும்பதிஉறைவிடம்தண்ணளியார்
இரும்பொழில்இலம்பையங்கோட்டூரே....3

ஊர்விடைஅமர்பவன்உண்பலிதேர்
ஓர்முடைத்தலையெனும்ஓடுடையான்
நீர்மடைஎனவருள்நெஞ்சனிடம்
ஏருடைஇலம்பையங்கோட்டூரே....4

தருஞ்சுகமவன்கழல்சாற்றுமன்பர்
பெருஞ்சுமையெனும்வினைதீர்த்தருளும்
அருஞ்சுவைப்பேருடைஐயனிடம்
இருஞ்சுனைஇலம்பையங்கோட்டூரே....5

பாடிடும்அன்பரின்பாவலங்கல்
சூடிடும்அருள்நிதிதோன்றுமிடம்
தேடிடும்பொழில்மலர்த்தேனளிகள்
கூடிடும்இலம்பையங்கோட்டூரே....6

நளிர்மதிசடையனைநாடிடுவோர்க்(கு)
ஒளிர்கழல்அருள்பவன்உறையுமிடம்
துளிர்விடுமுகைமலர்ச்சுரும்பினமார்
குளிர்பொழில்இலம்பையங்கோட்டூரே....7

நிசமவன்தீங்கினைநீக்கியன்பில்
வசமுறஅருள்கிறவள்ளலிடம்
அசைவுறுவணம்குயில்ஆர்த்திடும்பண்
இசைமலிஇலம்பையங்கோட்டூரே....8

பன்னகம்அணிபவன்பைந்தமிழில்
சொன்மலர்மாலைகள்சூடுமையன்
பொன்னவன்உறைவிடம்பூஞ்சுரும்பார்த்(து)
இன்புறும்இலம்பையங்கோட்டூரே....9

திசையறிகிலாவெளித்திரிகோள்கள்
விசையுறுகதிசெலவிதித்தவன்நல்
இசையதுவானவன்இருக்குமிடம்
இசையுடைஇலம்பையங்கோட்டூரே....10

December 10, 2012

திருக்கானூர்

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)

 

திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

 

தளைத்து வினைசெய் யிடர்தீர்க்கும்

...சடையன் செந்தாள் மலர்பற்றிக்

களத்தில் விடத்தைக் கொண்டருளும்

...கதியே எனநீ அடைநெஞ்சே

தளத்தில் வெளியில் நடம்செய்யும்

...தனியன் புரத்தை நகையாலே

கொளுத்தும் ஈசன் உறைகோவில்

...கொள்ளி டஞ்சூழ் கானூரே....1

 

தளம்=மேடை, வெளி=ஆகாசம்.

களம்=தொண்டை.

தனியன்=ஒப்பில்லாதவன்.

 

இறைவன் ஈசன் என்றுணர்ந்து

....ஏத்திப் பணியும் அன்பர்க்கு

நிறைவைத் தருமே நிமலன் தாள்

....நினைந்து அடைநீ மடநெஞ்சே

நறைசேர் மலரால் நன்மாலை

....நயமாய்ச் சூடும் நம்பனவன்

குறைகள் தீர்ப்பான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....2

 

நறை=தேன்.

 

எஞ்சும் நாளில் முதுமையினில்

....இடர்கள் பலவும் பட்டுழல

அஞ்சும் காலன் வருமுன்னே

....அரன்பேர் போற்றி அடைநெஞ்சே

பிஞ்சு நிலவும் பேரலையாய்

....பெருகும் நதியும் கொன்றையுமே

குஞ்சி வைத்தான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....3

 

ஆறு தலதை விழைமூப்பில்

....அண்டும் துன்பம் எத்தனையோ

நீறு புனைந்து நெகிழ்ந்துருகி

....நேயன் போற்றி அடைநெஞ்சே

ஆறு சடையன் ஆலின்கீழ்

....அமரும் தவம்செய் போதமருள்

கூறும் ஒருவன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....4

 

சீரார் இளமை தேயபிணி

....தேடி வரவும் இயமபடர்

ஓரா துயிரைக் கொள்ளுமுனம்

....உய்வை நாடி அடைநெஞ்சே!

காரார் கண்டன் கதியாகி

....கனிவோ டருளும் கழலனவன்

கூரார் மழுவன் உறைகோயில்

.. கொள்ளி டஞ்சூழ் கானூரே....5

 

தள்ளும் வயதில் தடுமாறித்

....தடிக்கை கொண்டு பிணிமூப்பில்

விள்ள முடியா வேதனையை

....விட்டு விலக அடைநெஞ்சே

அள்ளும் மலரின் மணமாக

....அருளும் வள்ளல் ஒளிர்பிறையை

கொள்ளும் சடையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....6

 

தள்ளும் வயது என்றால், நடக்க முயலும்போது சுதாரிக்க இயலாமல் 'தள்ளும் 'வயதான முதுமையில் என்ற பொருளில்.

 

காலக் கணக்குத் தவறாமல்

....காலன் வந்து நிற்குமுன்னே

மூலப் பொருளாம் முன்னவனின்

....முடி,தாள் போற்றி அடைநெஞ்சே

சீலச் சுடராய்த் திகழ்கிறவன்

....தேடி அருளைத் தந்திடுவான்

கோலப் பிறையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....7

 

தொடுக்கும் போராய் பிணிவாட்டும்

....துன்பை எண்ணிக் கலங்காமல்

உடுக்கை ஒலியில் நடமாடும்

....ஒருவன் போற்றி அடைநெஞ்சே

எடுக்கும் பிறவிக் கடல்தாண்ட

....இணையில் அருளை வரமாகக்

கொடுக்கும் பெருமான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....8

 

பொன்றும் காலம் வந்திடுமுன்

....புனிதன் தாளே கதியென்று

ஒன்றும் சித்தம் கொண்டன்பில்

....ஓதி உய்ய அடைநெஞ்சே

கன்றின் தாயாய்ப் பேணுபவன்

....கனிவாய் அருட்கண் பார்த்திடுவான்

கொன்றை சூடி உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....9

 

ஆண வமெனும் மாசுதனை

....அகற்றி உய்வை அடைநெஞ்சே

வீண டைவதோ இப்பிறவி

....விருதாய் மூப்பில் வருந்துவதென்

காணக் கண்செய் தவமாகக்

....கருணை தவழும் நுதல்விழியன்

கோணற் பிறையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....10