(கலிவிருத்தம் ; 'மா மா மா காய்'என்ற வாய்பாடு)
உள்ளம் உருகி உணரும் அன்புக்கே
அள்ளி வழங்கும் அருளன் துதிபாடிப்
புள்ளி வண்டார் பொழில்சூழ் பூந்துருத்தி
வள்ளல் பாதம் வாழ்த்த வருமின்பே....1
கூற்றை உதைசெய் கோவின் அடியார்கள்
நீற்றில் மிளிரும் நிமலன் அருள்திறத்தைப்
போற்றும் அலங்கல் பூணும் பூந்துருத்தி
ஏற்றன் பாதம் ஏத்த எழுமின்பே....2
தலையில் மதியை தரித்த அங்கணனை
இலையும் மலரும் இணைப்பூந் தாள்தூவிப்
பொலியும் நதிசேர் பொழிலார் பூந்துருத்தி
நிலையி னானை நினைய நேருமின்பே....3
இன்னல் தந்தே இடர்செய் வினைதன்னை
பின்னம் செய்யும் பெம்மான் பொற்கழலன்
புன்னை மலர்சூழ் பொழிலார் பூந்துருத்தி
மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பே....4
சாவா மருந்தாய்த் தாங்கும் திருப்பெயரை
நாவால் துதித்து நம்பன் அருள்சேரப்
பூவார் நந்த வனம்சூழ் பூந்துருத்தி
தேவா என்னத் தீரும் தீவினையே....5
தூதா யன்று தோழற் காய்நடந்த
பாதா உமையோர் பாகா மறைவிரிக்கும்
போதா அளிசூழ் பொழிலார் பூந்துருத்தி
நாதா என்ன நாளும் வருமின்பே....6
மென்னோக் குடைய விழியாள் தன்கேள்வா
தன்னேர் இல்லா தாளா அஞ்சலருட்
பொன்னே கவினார் பொழில்சூழ் பூந்துருத்தி
மன்னே என்ன மங்கும் வல்வினையே....7
கொடையா யருளிக் குறைதீர்த் தாட்கொள்ளும்
விடையா கரத்தில் மிளிர்மான்,தீமழுவாட்
படையா பசிய பொழில்சூழ் பூந்துருத்தி
சடையா என்னச் சாயும் வல்வினையே....8
இயலும் வகையில் இறைவன் நினைவாகப்
பயனைக் கருதாப் பணிசெய் அடியாரை
அயலில் பொன்னி அலைபாய் பூந்துருத்தி
அயனின் அருளால் அடையா அருவினையே....9
காற்று பூமி கனல்நீர் வானாகத்
தோற்று வானைத் துதிக்கும் அடியார்கள்
நீற்றில் ஒளிர்ந்து நிற்கும் பூந்துருத்தி
ஆற்றன் அடியை அடைதல் அழகாமே....10.