February 04, 2012

திருவேடகம்!

இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:


(மா + கூவிளங்காய் + நிரை + கூவிளம்-கூவிளங்காய் / தேமா-கருவிளங்காய்)


அடியின் முதற்சீர் நெடிலில் முடியும்; மூன்றாவதாக வரும் நிரைச்சீரில் நெடில் இராது; 4-5 சீர்களிடை வெண்டளை பயிலும்; அடியின் ஈற்றுச் சீரின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வரும்.
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")


பின்வரும் பாடல்களுள் சில ஈசனை முன்னிலையிலும், சில படர்க்கையிலும் பாடுவன.

(சிவசிவா நன்றி!)



தேவா தீஞ்சுடரே சிவ சுந்தரத் தெள்ளமுதே
நோவா கின்றவினை நொறுங் கச்செயு நுண்மையனே
ஓவா துன் துணையே உறத் தந்தருள் ஒண்பொருளே
சேவார் வெல்கொடியாய் திரு ஏடக மேயவனே....1

மூவா முன்னவனே முழு தாகிய மூலவனே
காவா என்றவுடன் கனிந் தேயருள் செய்திடவே
மாவாம் சேவமர்ந்து மலைப் பெண்ணுடன் வந்தருள்வாய்
தேவா சிற்பரனே திரு ஏடக மேயவனே....2

 

எந்தாய் உன்நிழலில் எமை வைத்தருள் ஈந்திடுவாய்
கந்தார் பூவலங்கல் கமழ் தோளுடை கண்ணுதலே
சந்தார் தேவாரத் தமிழ் மாந்திடும் தற்பரனே
செந்தீ மேனியனே திரு ஏடக மேயவனே....3

சந்தார்=இசை நிறைந்த
கந்தார்= நறுமணம்நிறைந்த


பேரா யானவனை பிறை சூடியை போற்றிசெயச்
சேரா வல்வினைகள் தெறித் தோடிடச் செய்திடுவான்
காரார் மாமிடறா கழல் தந்தருள் கண்ணுதலே
தீரா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....4

பேராய் ஆனவன்= நாமரூபன்.

 

ஆரா இன்னமுதே அழ லாயொளிர் செம்மலையே
காரார் மேகமெனக் கனி வாகும் அருள்மழையே
தாரார் தோளுடையாய் தருக் கீழமர் சற்குருவே
சீரார் கின்றபதி திரு ஏடக மேயவனே....5

பையார் நச்சரவைப் பரி வாக அணிபவனை
மையார் கண்ணியுமை மண வாளனை மாதவனைக்
கையால் தூமலர்பொற் கழல் தூவியெம் அங்கணனே
செய்யா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....6

 

மின்னார் செஞ்சடையில் மிடை யும்பிறைக் கண்ணியுடன்
பொன்னா லேஇழையும் பொலி மார்புடை பூரணனாய்த்
தன்னே ரில்நடனம் தனை ஆடிடும் தாண்டவனே
தென்னா என்பவர்க்குத் திரு ஏடக மேயவனே....7

இழை= ஆபரணம்.
மிடைதல்=செறிதல்.


புரமோர் மூன்றினையும் பொடி யாகிடப் புன்னகைத்தாய்
சுரமார் பண்ணிசையில் சுக மேயுணர் வானவனே
வரமா மஞ்செழுத்தை மனம் ஓதிட வந்தருள்வாய்
திரையார் கங்கையனே திரு ஏடக மேயவனே....8

 

தொன்றா யானவனே துதி செய்பவர்க்(கு) அண்மையனே
வென்றாய் பூங்கணையை விடு வேளெரி வீழ்ந்திடவே
அன்றோர் தோழனுக்காய் அருள் செய்திடத் தூதுவனாய்ச்
சென்றாய் எற்கருளாய் திரு ஏடக மேயவனே....9

மட்டார் பூங்குழலி மகிழ் மாமலை மன்னவனே
அட்டாய் தென்னிலங்கை அரக் கன்திறல் அற்றிடவே
பிட்டே உண்டரசன் பிரம் பாலடி பட்டவனே
சிட்டா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....10