எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
ஒருமன்றில் நட்டமிடும் உமைகேள்வன் மதியுறையும்
மருள்விளைக்கும் மயல்நீக்கும் மதிசூடி அமருமிடம்
பருகென்று பொன்னியன்னை பசுமைநிறை காட்சியள்ளித்
தருகின்ற வயல்சூழும் தண் ஆனைக் காநகரே....1
வெருவவரும் வினைத்தளையை விடுவித்து நலம்சேர்க்கும்
அருளுருவில் திகழ்வோனாம் அம்பலத்தான் அமருமிடம்
திருவடியைப் போற்றிடவே தேடிவரும் பொன்னிநதி
அருகடையும் அழகுடைய ஆனைக்கா நகர்தானே....2
அப் புரங்கள் மூன்றினையும் அனலெரிக்க நகைத்தவன்நம்
ஒப்பரிய அப்பனவன் உமையோடும் அமருமிடம்
எப்புறமும் இருளெனவே நிழலடர்ந்த பசுமரங்கள்
செப்பரிய எழிலாரும் திருவானைக் காநகரே....3
ஆல்தருவின் நீழலிலெ அருள்மோன குருவவனை
நால்வகையாம் மறைபுகழும் நம்பனவன் அமருமிடம்
பால்நுரையாய்ப் பொன்னிநதி பாய்வாய்க்கால் வயலூடே
சேல்பாயும் வளம்சேரும் திருவானைக் காநகரே....4
சஞ்சலத்தை நீக்கியருள் தஞ்சமதைத் தந்தருளும்
குஞ்சரத்தின் தோலுடையான் கூத்தனவன் அமருமிடம்
அஞ்சுகயல் விழிமாதர் அளைந்தாடும் காவிரிபால்
மஞ்சடையும் பொழில்சூழும் மணிஆனைக் காநகரே....5
பெறுபவற்றுள் பெரிதவன்சீர் பேறாகப் பாடுபவர்
அறுவினையும் தீர்க்கின்ற ஐயனவன் அமருமிடம்
மறுவறு மணமலர்த்தேன் மாந்துகிற வண்டினங்கள்
உறுபொழில்கள் மஞ்சுவரை உயரானைக் காநகரே....6
அழுதவனை சிந்திக்கும் அன்பரிடர் யாவையுமே
நழுவியகல் வழிசெய்வான் நம்பனவன் அமருமிடம்
கொழுமலரில் தேனருந்தக் கூடுமளி முரலுமொலிக்
கெழுமுகிற பொழில்சூழும் கேடிலா.னைக்காவே....7
கண்ணீரில் ஆணவமும் கரையவழும் இராவணனின்
பண்ணாரும் மறைகேட்கும் பரமனவன் அமருமிடம்
வெண்ணீறு மெய்பூசி விரிசடையன் புகழ்பாடி
மண்ணோர்கள் அடைகின்ற மணிஆனைக் காநகரே....8
நன்றினையே நவகோளும் நல்கிடவும் செய்தருள்வான்
அன்றயன்மால் அறியரியான் அழலானான் அமருமிடம்
நன்மலரில் தேன்மதுவை நாடிமுரல் அளியினங்கள்
பன்மலர் ஆர் பொழில்சூழும் பதிஆனைக் காநகரே....9
பித்தனவன் எரியாடும் பேயனவன் தயைசெய்யும்
நித்தனவன் பவமழிக்கும் நிமலனவன் அமருமிடம்
புத்தலர்கள் மலர்ந்திருக்கும் பூவனத்தில் வண்டினங்கள்
தெத்தெனவென்(று) ஆர்த்திருக்கும் திருவானைக் காநகரே....10