(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு)
(திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)
துடைப்பவன் வினைசெய் துன்பை; துய்யமெய் அன்பில் வேண்டக்
கிடைப்பவன்; குருவாய்க் கல்லால் கீழமர்ந் தருளும் தேசாய்க்
கடப்பவன் யுகத்தைக் காலமாய்ச்
சுழன்றிட ஓட்டிப் பாரைப்
படைப்பவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே. ...1
சேந்தவன் நீல கண்டம் திகழொளி நீற்ற னாக
ஆய்ந்தவன் மறைகள் நான்கும் அடியவர் உள்ளக் கோவில்
ஏய்ந்தவன்; மாணிக் காக இயமனை சினத்தால் எற்றிப்
பாய்ந்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....2
சேந்த=சிவந்த
மறைந்தவன் அருள்செய் கின்ற வகையினில் அடியார் நெஞ்சம்
நிறைந்தவன் பூச லாரின் நினைவினில் எழுந்த
கோவில்
உறைந்தவன் ஆதி அந்தம் ஒன்றுமில் லாத ஐயன்
பறந்தலை ஆடு வான்தம் பதிதிரு நின்ற வூரே....3
எண்பொலி எழுத்தைந் தென்றும் எண்ணிடும்
அடியர்க் கன்பன்
ஒண்பொலி முக்கண் நெற்றி
உடையவன்
மறைகள் தன்னைப்
பண்பொலி இசையாய் ஓதிப் பரவுவார் துன்பைத் தீர்க்கும்
பண்புடை ஐயன் மேவும் பதிதிரு நின்ற வூரே....4
குவித்திடு கரங்கள் கொண்டு குவிந்திடும் மலர்கள் தூவத்
தவித்திடத் துயர்செய்
ஊழைச் சாடியேத் தீர்க்கும் ஐயன்
கவித்திடு முடியாய்க் கொன்றைக் கவினுறச் சடைமேல் சூடும்
பவித்திரன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே...5.
ஆடினான் எரிகான் மன்றில் அழலிடை ஒருவன் என்றே
தேடினார் முடிதாள் அன்று திகைத்திட உயர்ந்தான் தீயாய்
வாடினார் இசையில் வெல்ல வந்தவொர் விறகா ளாகிப்
பாடினான் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....6
சேவையன் பொடுசெய் வாரின் தீந்தமிழ்ப் பாவில் தங்கும்
கோவையன் றொருவன் சீறிக் கோலினால் வீச ஏற்கும்
தேவையென் றுமுன்னக் காப்பான் திகழுறு வாம பாகப்
பாவையன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....7
ஊர்த்தவ தாண்ட வம்செய் உத்தமன் அடியார் தம்மின்
சீர்த்தநற் றுணையாய் நின்று தீவினை விளைக்கும் துன்பைத்
தீர்த்தவன் உமைதன் ஆகம் சேர்த்தவன் மதன்நீ றாகப்
பார்த்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....8
பொங்குமன் பாலுள் ளத்தில் பூசலார் எடுத்த கோவில்
தங்குவன் எளியர்க் கென்றும் தயையினை வழங்கும் வள்ளல்
எங்கணும் நிறைந்தி ருப்பான் இடமாய் உமையைக் கொண்ட
பங்கினன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....9
எங்கணும்=எங்கும்.
சுற்றமும் சொந்த பந்தத் தொடரெனும் தளைகள் மீட்கும்
உற்றவன் உயிரை அன்பில் உய்ப்பவன் அடியார் நண்ணும்
நற்றவன் குருவாய்ப் பாரில் நலம்பல மாந்தர் கொள்ளப்
பற்றுவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....10