(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
அரியுடன் அயனறி யாத
...அடிமுடி தனைஉடை யானும்
எரிகடத் திடைநடம் ஆடி
...இடுபலிக் கேஅலை வானும்
பரிவொட ருள்பொழிந் தேநம்
...பழவினை தீர்த்திடு வானும்
திரிதரு எயிலெரித் தானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....1
நுரையிடைக் குமிழிய தாக
...நொடித்திடும் இயல்புடை வாழ்வில்
குரைகழல் நடமிடு தாளைக்
...கும்பிட வந்தருள் வானும்
தரையுள உயிர்களைத் தாங்கித்
...தழைத்திடச் செய்திடு வானும்
சிரமதில் பிறையுடை யானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....2
வழுமலி உலகியல் வாழ்வில்
...மாண்புறு நிலைபெற எண்ணித்
தொழுதிடு அடியவர்த் துன்பைத்
...துடைத்துநல் வழியமைப் பானும்
விழுகதிர் போல்நிறத் தானும்
...விரிசடை மேல்நதி சூடி
செழுமண மலரணி வானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....3
கீறணி பிறையுடை யானும்
...கிலிதரு வினைதுடைப் பானும்
வீற ணி போர்விடை யானும்
...விண்ணவர் தம்பெரு மானும்
கூ றணி உமைஇடத் தானும்
...குதியலை நதியுடை யானும்
சீறர வம்புனை வானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே ....4
வில்லலர் கணைமதன் வீழ
...விழித்திடு சினமுடை யானும்
கல்லலர் என்றிட ஏற்கும்
...கருணைசெய் மனமுடை யானும்
சொல்லற நலிவுறும் போதும்
...துணையென முன்வரு வானும்
தில்லையில் ஆடலி னானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....5
மரகத நிற உமை கேள்வன்
...மறைபுகழ் செய்யவன் தானும்
அரவுடன் கரிஉரி மேவும்
...அழலுடை அங்கையி .னானும்
சிரமதில் மிளிர்ந்திடு திங்கள்
...செழுமலர்க் கொன்றையி னானும்
திரையினில் மீன்பிடிப் பானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....6
சிரமொரு பத்துடை யானின்
...திறல்தனை அடர்த்திடு வானும்
மரநிழல் கீழமர் மோன
...வடிவினில் திகழ்குரு வாகி
வரமளித் துயர்நிலை கூட்டும்
...மலைமகள் பங்குடையானும்
சிரமலி மாலையி னானும்
... திருப்பரங் குன்றமர்ந் தானே....7
விரவிடு மணப்புகை யோடு
...விதவித நறுமலர் சூட்டிப்
பரவிடு பத்தரைக் காக்கும்
...பதமலர் தனையுடை யானும்
இரவினில் எரியிடு கானில்
...எழில்நடம் செயும்தனி யானும்
திரைவிடம் சேர்மிடற் றானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....8
உரியதொர் சிவனடி யாரென்(று)
...ஒப்பிட வஞ்சக மாகச்
சுரிதனை வீசிடும் போதும்
...தொழும்சிவ பத்தருக் கன்பன்
விரிசடை நுதல்விழி யானும்
...விடைதனில் அமர்ந்தருள் வானும்
திரியரண் மூன்றெரித் தானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....9
முந்தையன் பின்னவன் என்றும்
...மூலவன் முதலவன் றானும்
சந்திரன் வானதி பாம்பைத்
...தலையினில் சூடிடு வானும்
சந்ததம் பத்தியொ டெண்ணும்
...தகவுடை யருக்கருள் வானும்
செந்தழல் மேனியி னானும்
... திருப்பரங் குன்றமர்ந் தானே....10