December 11, 2010

ஆலவாய் அண்ணல் - 2

 

விரிவான் கங்கையன் வெண்ணீ றணிசிவன்
பொரியார் வண்டுசூழ் பூம்பொழில் தளியான்
தரியான் அன்பிலார் தம்முளம் அவர்க்கே
அரியான் ஆலவாய் மேவிய அண்ணலே....1

முன்பின் இல்லா ஆதியாம் மூலமாம்
அன்பில் ஆளும் அருள்நிறை வள்ளலாம்
துன்பில் தோன்றாத் துணையாய்த் தோன்றிடும்
என்பொன் ஆலவாய் மேவிய ஈசனே.....2

வீற்ற இன்னருள் கோலமும் வெவ்வினை
மாற்றும் ஆறுதல் தந்திடும் மாயமென்?
போற்றும் அன்பரின் பற்றெனும் பூரணன்
ஏற்றில் ஏறுமெம் ஆலவாய் ஈசனே...3

புறவும் ஆழியும் நின்னருள் போற்றிடும்
கறவைக் கன்றென உன் தாள் கருதியே
நறவு சேர்மலர் தூவினேன் நைவினை
அறவந் தேத்துமெம் ஆலவாய் அண்ணலே....4

புறவு=காடு,நறவு=தேன்,வாசனை
கறவை=பசு
.....

கல்லால் தாக்கினும் கனிந்ததைத் தாங்குவான்
ஒல்லாச் சாட்டையின் ஊறினை ஒப்புவான்
சொல்லால் கூடிடாத் தூயமெய் அன்பினால்
எல்லாம் நல்கும்நம் ஆலவாய் அண்ணலே....5

கல்லால்=கல்லினால்.(சாக்கிய நாயனார்)
ஒல்லா=பொறுக்கமுடியாத.

 

விதித்த வாழ்வும் வெருதா கிடாதுளம்
பதித்த நாமம் பரவினால் உய்யலாம்
கதித்து ஆடுவான் கழலிணைக்(கு) அன்பராய்த்
துதித்த வர்துயர் தீர் ஆல வாயரே....6.

கதித்து=விரைந்து

மாலை வண்ணனாய் மன்றதில் ஆடிடும்
நீல கண்டனாய் நெஞ்சுறைத் தெய்வமாய்ச்
சூலை நோயுறு தூயடி யார்க்கருள்
ஆல வாயுறை அங்கண் அடிகளே....7.

கல்லேன் பொன்னார் கழல்தொழு துய்வழி
வல்லான் இன்னருள் வள்ளலென்(று) ஏத்திலேன்
பொல்லாத் தீவினைப் பொடியெனச் செய்குவன்
நல்லார் போற்றும்நம் ஆலவாய் நாதனே....8.

ஆர்=அழகு என்னும் பொருளில்

கால காலனாய்க் கண்ணுதல் அண்ணலாய்க்
கோல மாகவேக் கொண்டிடும் ஆடலை
ஞால முய்ய நடித்தநம் ஐயனாம்
ஆல வாயரற் கன்புசெய் நெஞ்சமே....9.

சேவி லூர்பவன் சிந்தையில் நிற்பவன்
கூவி யன்பர் குரல்கொடுத் தாலுமே
தாவி வந்தருள் தந்திடும் மெய்யனாய்
ஆவி காப்பவன் ஆலவாய் அண்ணலே
.....10.

(
கலிவிருத்தம்)

December 02, 2010

அடியேற்கருள்வாயே அண்ணாமலையானே !

 

'மா புளிமாங்காய் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.

பண்ணார் நடமாடும் பதமே தருவாயே
கண்ணால் முடி,தாளைக் காணா அயன்மாலும்
விண்ணாய் வளர்தீயாய் மிளிரும் உனைநாடும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....1

புண்ணாம் படிநோவப் புரியும் வினையோடக்
கண்ணார் ஒளிமேவும் கருணை பொழிவாயே
மண்ணாய்ப் புனல்வானாய் வளியாய் அழலானோய்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....2

கண்ணால் உகுநீருக் கருள்வாய் மதலைக்கே
உண்ணா அமுதுண்டே உமையா ளுடைமைந்தாய்
பண்ணார் பதிகத்தால் பரவித் துதிசெய்தார்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....3

கண்ணீர் விழிமல்கக் கரையும் உணர்வாகி
எண்ணேன் உனதன்பை இரங்காய் இறையோனே
விண்ணாய் உயர்கோவில் மேவும் அருணேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....4

புண்ணார் விழிசெந்நீர்ப் புனலாய் வழிந்தோடக்
கண்ணாய்த் தனதப்பும் கருணை சொலப்போமோ?
திண்ணார்த் தடந்தோளன் திண்ணன் துதிசெய்யும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....5

வண்டார் மலர்மாலை வடிவாய் இசைந்தாடக்
கண்டோர் உனைநாடும் கதியாய் வருவாயே
பண்டாய் நவமானாய் பதியே பரமேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....6

எண்ணாய் எழுத்தாகி இயம்பும் பொருளாகிப்
பண்ணார் இசையாகிப் பரவும் துதியானாய்!
கண்ணோர்க் களியாகக் காணும் பெருஞ்சோதி
அண்னா மலையானே அடியேற் கருள்வாயே.... 7

எண்ணேன் இமைப்போதுன் இணைத்தாள் சிரமேற்கப்
பண்ணேன் உனைநாளும் பரவும் துதிபூசைத்
தண்ணார் தடம்சோலைத் தருசூழ் வனமோங்கும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....8

கண்ணா யிரங்கொண்ட காளி யவள்கேள்வா
விண்ணா றினையேற்கும் விரிசெஞ் சடையோனே
வெண்ணீ றணிவோனே விந்தை அழலோனே
அண்ணா மலையோனே அடியேற் கருள்வாயே....9

விண்ணோர் அமுதேஎம் வினையாம் பவம்தீர்ப்பாய்
பெண்ணோர் புறம்வைத்தாய் பிறைவார் சடையோனே
மண்ணோர் தொழும்ஞான மறையோன் ரமணர்சேர்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....10

November 06, 2010

சிராப்பள்ளி சேர்!

 

( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )

பற்றும் பழவினையால் பந்தப் படும்வேளை
சற்றும் சிவநாமம் சாற்றுவை நெஞ்சமே!
சுற்றும் கயலுயரத் துள்ளுமெழில் பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்....1

குருவாய் அமர்வோனின் கோலம் நினைந்தே
உருவாய் ஒளியாய் உணர்வாய் மனமே
தருவான் மலர்பதம் தாயாய் அருள்வான்
திருவார் சிராப்பள்ளி சேர்....2

தொல்வினை சூழ்ந்தே துயர்தரும் போதினில்
வெல்வழி யொன்றினை மேவிடு நெஞ்சமே
மெல்லிய லாளொடு வெள்ளை எருதமர்
செல்வன் சிராப்பள்ளி சேர்....3

அவமாய் அலைந்தே அலமரும் வாழ்வில்
நவமாம் வழியினை நாடிடில் நெஞ்சே
தவமே உருவெனச் சார்ந்தார்க்(கு) அருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்....4

தாவல் தருவினையைத் தாண்டி உயர்வுறச்
சேவமர் செல்வனருள் தேடுமென் நெஞ்சமே
நா வல் அடியர் நயமுறப் போற்றிடும்
தேவன் சிராப்பள்ளி சேர்.....5

தாவல் = வருத்தம்
சே + அமர் = சேவமர் ( உடம்படு மெய் 'வ்' வந்து சேவமர் என்றாகியது )

 

அலையாய் அலைந்தே அமைதியை நாடின்
நிலையாய் மலர்தாள் நினையென் மனமே
கலையாய் நடிக்கும் கழலன் இமயச்
சிலையான் சிராப்பள்ளி சேர்....6

சிலை=மலை.


நலம்பெற
வைத்து நலி வினைத் தீர்த்தே
வலம்பல நல்கிடும் வாஞ்சைஎண் நெஞ்சே!
தலம்பல ஆடிடும் தாண்டவன் கைலைச்
சிலம்பன் ச்ராப்பள்ளி சேர்....7


ஆர்த்தெழும் தீவினை அண்டாதென் நெஞ்சமே
வார்த்தையில் சொல்லொணா வாத்ஸல்யம் பொங்கிடப்
பார்த்தருளும் அன்னையாய்ப் பாவையின் துன்பினைத்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்....8


பகழியின் கூர்தோய்ப் பறவையாய் நோவ
நிகழும் வினைத்துயர் நீங்கிட நெஞ்சே
தகழி யொளியினில் தண்மலர் தூவத்
திகழ்ந்தான் சிராப்பள்ளி சேர்....9

பகழி=அம்பு.


கட்டும்
வினைகள் கயிறாய்ப் பிணிப்பதை
விட்டு விலகிட வேண்டிடின் நெஞ்சமே
இட்டன், அடியருக்(கு) இன்னருள் செய்திடும்
சிட்டன் சிராப்பள்ளி சேர்....10

 

October 27, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே !

வண்ணப் பாடல்!

(தானனா தானன.. தந்த தான)

வாரிமீ தாடுது..ரும்ப தாக
...
வாடுவோர் நாடிடும்..அஞ்சல் ஈவாய்
சாரியாய் ஊழ்துயர்.. தந்த போதுன்
...
தாளதே நானுணர்.. சிந்தை யாவாய்
கோரியே மாதவள்.. வந்தி நாடும்
...
கூலியா ளாகுமுன்..அன்பு என்னே!
ஆரியா ஆதர..வென்று மானாய்
...
ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.

 

 

ஓடுமே தீவினை யஞ்சி யேதான்
...
ஓதுமோர் ஆதியு .னன்ப தாலே
பாடுவோ ராயிர முன்ற னாமம்
...
பாகுசேர் தேனத னின்ப மாமே
தோடுடை யாயுனை அன்று நாவால்
...
சூடுபா மாலைசெய் விஞ்சை என்னே
ஆடுவாய் வானெழில் மிஞ்சு மாடல்
...
ஆலவாய் மேவிய எம்பி ரானே.

 


மாறலா தாடிடு .. மன்று ளானே
...
மாசிலா மாமணி.. யென்று மானாய்க்
கூறதாய் மாதுமை..தங்கு மீசன்
...
கோலமார் சோதியி.. .லின்பு சேரும்
பேறதாய் ஆகுமு.. .னன்பி .னாலே
...
பீடதே யாகிடும்.. தஞ்ச மீவாய்
ஆறலை வேணிய.. சுந்த ரேசா
...
ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

மாறு=ஒப்புமை.

 


மோனமாய் ஆலமர்.. கின்ற தேவே
...
மோகமோ டாறையும்.. வென்றி டேனோ?
கூனலாய் வான்மதி.. கங்கை சூடும்
...
கோதிலா வேணிய..னென்று வேத
கானமாய் ஓதிடும்.. அன்பர் நேசா
...
காவலாய் ஆதர மென்று தாயும்
ஆனவா மாதுமை.. பங்க .னாகி
...
ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆதரம்=அன்பு, உபசாரம்
மோகமோ டாறையும் = மோக, காம, லோப, குரோத, மத, மாச்சர்யம்.

 

பூரணா நீறணி..கின்ற ஈசா
...
போதமே நானறி..கின்றிலேனே
பாரமார் ஊழ்தரு.. துன்பு மாயும்
..
பாதமே நாடுயர்.. சிந்தை ஈவாய்
காரணா தீயெரி.. கின்ற ஈமம்
...
காதலோ டாடிடு.. மன்ற மாகும்
ஆரமாய் மார்பிசை..கொன்றை யோடே
...
ஆலவாய் மேவிய..எம்பி ரானே.

October 09, 2010

கச்சி ஏகம்பனே !



'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.

நீர்த்திரை பனித்திட நெகிழ்வுடன்
நாத்தழும் பேறிட நானுனை
ஏத்திடு மாறறி யேனெனை
காத்தருள் கச்சியே கம்பனே....1

நைவினை துயர்தரும் நாளுமே
எய்திடும் புகலினை எண்ணியே
துய்மலர் மாலைகள் சூட்டினேன்
கைகொடு கச்சியே கம்பனே….2

 

மண்டிடும் வினைதனில் வாடியும்
கொண்டிடும் அன்பினில் கோரியே
தண்டமிழ்ப் பாமலர் சாற்றினேன்
கண்டருள் கச்சியே கம்பனே....3

கோருதல்=வேண்டுதல்.

தண்ணுமை துடிதரும் தண்ணொலிப்
பண்ணுடன் ஆடிடும் பாதனே
பெண்ணுமை பதியருள் பேறளி
கண்ணுதல் கச்சியே கம்பனே....4

தண்ணுமை=மத்தளம்.

 

நிதிதனை நினைந்துழல் நிலையினில்
அதிபதி உனதருள் அறிகிலேன்;
விதிதரும் விளைவினை வெல்கிற
கதியருள் கச்சியே கம்பனே....5

வழித்துயர் மிகுந்தயிவ் வாழ்வினில்
விழித்துழல் வேனுனை வேண்டினேன்
பழித்திட வருகிறப் பாழ்வினை
கழித்தருள் கச்சியே கம்பனே....6

 

இமிழ்த்திடு கழல்களின் எழில்நடம்
தமிழ்த்திரு மறைகளும் சாற்றுமுன்
உமித்துணை நினைவிலேன்; உற்றவா
கமித்தருள் கச்சியே கம்பனே....7

இமிழ்த்தல்=ஒலித்தல்.
உமி=நெல்லின் உமி (சிறிதளவு என்னும் பொருளில்
)

சிரத்துடை பிறையனே! திரியுமுப்
புரத்தையும் எரிசெயும் புண்ணியா!
துரத்திடும் தொல்வினை தொலைத்தருள்
கரத்தினாய் கச்சியே கம்பனே! .... 8

சுழலுறு வாழ்விதில் தொடர்கிற
நிழலென வினையதும் நேர்பட
உழலுதல் இன்றியென் றுய்வனோ?
கழலருள் கச்சியே கம்பனே.... 9

தலமுளான் இளநிலா சடையினான்
குலைவிலா அன்பிலே கொலுவுளான்
வலமுளான் அருளினை வழங்குவான்
கலையினான் கச்சியே கம்பனே.... 10

September 25, 2010

எண்ணிய(து) எய்துவர்!

 

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)

சிந்தையில் பரமனின் அன்பைத்
...தேக்கிநெக் குருகிடச் செய்யும்
செந்தமிழ் வாசகத் தேனில்
...திகழ்மணி வாசகர் உய்ந்தார்!
அந்தமொன் றென்றிலா ஈசன்
...அருளினை வேண்டிடு வார்கள்
எந்தவொர் ஐயமும் இன்றி
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....1

 

நீற்றினில் துலங்குவெண் மேனி
...நிலவுடன் சடையினில் கங்கை
ஆற்றினைக் கொண்டவன் தன்னை
...அப்பனென் றடியவர் அன்பால்
போற்றிடும் பாடலுக் கென்றே
...புரிந்திடும் ஆடலைச் செய்யும்
ஏற்றனின் அருள்திறம் கொள்வார்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….2

 

சுடலையில் நடமிடு பாதம்
...தூதென சுந்தரர்க்(கு) ஏகும்
கடலெழு விடத்தையும் ஏற்கும்
...கருணையில் அமுதெனக் கொள்வான்
குடமிடு சாம்பலும் மங்கைக்
...கோலமாம் படியருள் செய்வான்
இடபனாய் அருள்பவன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….3

 

நிறைவினை அளித்திடும் தாளை
...நிலையெனும் அடியரின் மெய்யன்
கறையுறு கண்டமும் கொண்டான்
...கரமதில் மான்மழு ஏந்திக்
குறையினைத் தீர்த்துயிர் காக்கும்
...குணநிதி மங்கையொர் பாகன்
இறையவன் புகழ்சொலும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….4

 

பெரும்பவத் துயரினை மாய்க்கும்
...பிஞ்ஞகன் அருளினை வேண்டி
விரும்பிடும் அடியரைக் காக்கும்
...விகிர்தனின் அருமையென் சொல்ல?
சுரும்புகள் ஆர்த்தெழும் சோலை
...சூழ்தளி மேவிடும் நாதன்
இருங்கழல் பற்றிடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….5

சுரும்பு=வண்டு

 

தெழிதரும் முழவொடு பம்பை
...திகழுறு விரிசடை யோடே
எழிலுடை நுதல்விழி யானின்
...இணையிலா நடமிடு பாதம்
அழிவினில் ஆழ்த்திடும் ஊழை
...அண்டிடா(து) அருள்தரும்;விண்ணின்
இழிநதி சடையனின் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….6

தெழி=ஒலி.

 

துன்புடன் இன்பமும் சூழ்ந்தே
...தொடரிரு வினைதரு வாழ்வில்
மன்பதை உலகினை காக்கும்
...வரமெனும் அஞ்செழுத்(து) ஓதி,
"என்பரம் என்கதி நீயே!"
...என்றிட அருளினைக் காட்டும்
இன்பனை வழிபடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….7

 

காய்ந்திடு சினமெழக் காலன்
...கலங்கிடச் சிறுவனைக் காத்தான்
ஓய்ந்துடல் வீழ்ந்திடும் போதில்
...உறுதுணை எனவரும் ஐயன்
பாய்ந்திடு நதிசடை ஏற்றான்
...பவமதைத் தூர்த்தருள் பார்வை
ஏய்ந்தவன் தாள்தொழும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....8

 

விரிசடை மேவிடும் கொன்றை
...வெண்மலர் தும்பையும் சூடி
கரியதன் தோலுடை யாகக்
...கண்கவர் நீறணி கோலன்
அரிஅயன் தொழும்தழல் ஆனான்
...அளவிலா அருள்தரும் வள்ளல்
எரிசுடு கானரன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….9

 

துளியவன் நினைவுகொண் டாலும்
...தொடர்வினைத் தீர்த்திடும் ஈசன்
தளியமை அடியரின் உள்ளம்
...தங்கிடும் அரனுமை நாதன்
ஒளிவெளி நீர்புவி காற்றாய்
...உயிர்களைக் காத்திடும் பெம்மான்
எளியனின் தாள்நினை அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! …10

September 08, 2010

திருஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!

 

எண்சீர் விருத்தம் - '8 மா' வாய்பாடு.
1
சீர்களில் மோனை
.

தலமும் புகழும் இசைக்கும் அன்பர்
...
சகல உயிரின் உய்வை எண்ணி
மலரும் புகைகொள் தூபம் கொண்டு
...
மனதும் நெகிழப் போற்றி னாரே!
விலகும் வினையும் தூசைப் போல
...
விடையோன் அருள்வான்!ஓமென் றோதும்
ஒலியில் நிறைவாய் நிற்கும் வேதன்
...
ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே! … 1

 

சுற்ற மென்றும் சொந்த மென்றும்
...
சூழும் பந்தம் காடு மட்டும்
நற்ற வன் தாள் பற்றிக் கொண்டால்
...
நன்மை என்றும் வந்து சேரும்
பெற்றம் ஏறும் பெம்மான் போற்றின்
...
பேறாம் உய்வை அருளும் அன்பில்
உற்ற புகல்தந் தாளும் ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே. … 2

 

மண்டை யோட்டில் பலியைத் தேரும்
...
மங்கை பங்கன் வேடம் ஏற்றிக்
கொண்ட அன்பில் கூடும் உணர்வில்
...
கும்பிட் டிறைவன் தாளை எண்ணும்
தொண்ட ரென்றும் தமிழ்த்தேன் பூவாய்த்
...
தொடுத்த பாக்கள் வரமாய்த் தோன்றி
உண்ட ருளென்னும் எம்மான் ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 3

 

விரியும் சடையில் கொன்றை தும்பை
...
விண்நீர் கங்கை மதியும் சூடி
கரியின் தோலை உடையாய் ஏற்கும்
...
கடவுள் தானாய் அடிமை கொண்ட
பரிவின் திறத்தை நாவ லூரர்
...
பதிகத் தாலே போற்றி செய்தே
உரிய அன்பில் கண்டு கொண்ட
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 4

 

படையாய் வருத்தும் ஊழை வெல்லும்
...
பாதை யொன்றைச் சொல்வேன்! அன்பைக்
கொடையாய் அருளும் ஐயன் பாதம்
...
குறித்தே மலர்பூ மாலைச் சாற்றி
விடையா! விமலா! என்றே போற்றின்
...
வினையைத் தீர்க்கும் மங்கை வாமம்
உடையான் நாவ லூரர் அன்பன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 5

 

கோதும் பழியும் கூட்டும் வாழ்வில்
...
குறியாய் பொருளென் றொன்றே கொள்வாய்
ஏதுன் இலக்கு? சொல்வேன் கேளாய்
...
ஏதம் செய்யும் துன்ப வெள்ளம்
மோதும் பவமாம் ஆழி வற்றும்
...
முக்கண் பரமன் பாதம் பற்றி,
ஓதும் நாவ லூரர் அன்பன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 6

கோது =குற்றம்
ஏதம்=துன்பம்

 

சுமக்கும் பார மல்ல யாக்கை
...
துணைவன் உறையும் அன்புக் கோவில்!
அமைக்கும் மேடை தன்னில் நம்மை
...
ஆட்டு விக்கும் ஆடல் மன்னன்!
இமைக்கும் கண்ணின் ஒளியாய்க் காக்கும்
...
இமயத் தலைவன் ஈடொன் றில்லான்!
உமைக்கன் பிலிடம் தந்தான் மேவும்
...
ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே! … 7

 

விலையில் லாத இறையன் பேதான்

...வினையைப் போக்கும் இன்பம் சேர்க்கும்

வலையில் சிக்கும் மீனைப் போல

...வலிய மாயை தன்னில் வீழா

நிலையைத் தந்துய் விக்கும் வள்ளல்

...நினைந்து நாளும் துதித்துப் போற்றின்

உலைவை தீர்க்கும் உமையாள் பங்கன்

...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 8

 

உலைவு=சஞ்சலம்

 

பதத்தை மனத்தில் பதித்துப் பாடல்
...
படைத்து அருளை நினைக்கும் அன்பர்க்(கு)
இதத்தை அளித்துக் காக்கும் ஐயன்
...
இதயம் தன்னைக் குடிலாய்க் கொள்வான்
விதத்தில் வேட மேற்று ஆளும்
...
விகிர்தன் எமனை பக்த னுக்காய்
உதைத்துக் கருணை செய்த ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 9

 

மயலில் மூழ்கி இறையை எண்ணார்
...
மயர்வைப் போக்கும் குருவாய் வந்தே
துயரில் ஆழ்த்தும் ஊழை வெல்லும்
...
துணிவைத் தந்தே அருளும் தெய்வம்
நயனம் நுதலில் உடைய ஈசன்
...
நதியும் மதியும் உமையும் கொண்டான்
உயரும் தழலாய் ஓங்கி நிற்பான்
...
ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே! … 10