November 09, 2011

தாயுமானவனே !

 

(அறுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)


முந்து வெவ்வினை இடரை மோதியே பொடிபடச் செய்வான்
சிந்தை இன்புற அடியர் செந்தமிழ்ப் பாடலை விழையும்
அந்தி வண்ணனின் அன்பன் ஆளுடை யார்க்குசெம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே...1

தேசன் வெவ்வினைத் துயரும் தீர்ந்திட மெய்யருள் புரிவான்
ஓசை தந்தநா யகியாள் உமையவள் பங்குடை யானின்
நேசர் தம்பசி தீர நிதம்படி பிள்ளையா ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா னவனே....2

பிள்ளையார் = ஆளுடை பிள்ளையார், சம்பந்தர்.

 

துண்டு வெண்மதி கங்கை சூடிடும் செஞ்சடை அண்ணல்
செண்டு நாண்மலர்த் தொடையல் திகழுறு எழில்மிகு தோளன்
பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே....3

உண்ட வன்தயை என்றே உருகியே துதித்திடும் பத்தி
மண்டும் அன்பரின் தமிழ்ப்பா மாலைகள் சூடிடும் ஐயன்
தண்டு வீசிட வாளாய்த் தந்தையின் தாளற வீழ்த்தும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே....4

 

ஓங்கு செந்தழல் உருவன் உயிர்களுக் குற்றவன் எம்மான்
தேங்கு மன்பினில் ஊழின் தீங்கினைத் தீர்த்தருள் செய்வன்
வீங்கு தென்றலாம் குளிர்தாள் வேண்டியே பாடிடும் அப்பர்
தாங்கும் கல்லுமொர் புணையாய்த் தந்தநம் தாயுமா னவனே....5

கூடல் நன்னகர் ஆளும் குழகனின் விதவித மான
ஆடல் கண்டுளம் மகிழும் அன்பினள் அடிதொழ மாலை
போட முந்திட நெகிழும் புடைவையால் மனம்தடு மாறும்
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே....6

தாடகை என்னும் பெயருடைய பெண்.

 

துக்க மின்பமென் றிரண்டு சுழல்வினை தனிலுழல் மாந்தர்
முக்க ணன்திருப் பெயரை முன்னிட அருள்தரும் அண்ணல்
தக்க நன்விழி மலரைச் சாற்றிட இடந்திடும் அன்பில்
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே....7

திரையும் சேர்பிணி மூப்பில் சிவன்பெயர் குழறிடச் சொலினும்
குரைசெய் செங்கழல் கூத்தன் குழைந்திட வந்தருள் செய்வான்
வரையை கெல்லுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டு
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே....8

 

கங்கை கொன்றையை அணிவான் கறைமிளிர் மிடறுடை ஈசன்
மங்கை பங்கினன் ஆடல் வல்லவன் உறுதுணை யாவான்
திங்கள் வாடிய நாளில் திருவடி தொழஅவன் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா னவனே....9

கருவி னில்வளர் பிறவிக் கடலினைக் கடந்திடச் செய்வான்
அருவம் ஆகவும் உருவம் ஆகவும் உயிர்களைக் காத்திடும் ஈசன்
தருவின் கீழமர் குருவாய்த் தண்டமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா னவனே....10

No comments:

Post a Comment