கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு
சொல்லும்தமிழ் மறைப்பாட்டினில் சுடரும்பர சிவனார்க்(கு)
அல்லும்பகல் பணிசெய்துயர் அரசாள்பவர் வாழ்வைக்
கல்லில்சொலும் தாராசுரம் காணப்பெறும் பேறாய்
செல்வன்கழல் தொழுவார்களைச் சேராவினை தானே....1
சொற்சித்திர மறையோதிடும் துய்யோர்களின் வாழ்வை
நற்பக்குவ பத்திசெயும் நலமாம்கதை யாகக்
கற்சித்திரம் மொழியும்தளி தாராசுரத் தேவை
அற்சித்திடும் அடியார்களை அடையாவினை தானே....2
அண்ணித்தவன் தாள்போற்றிடும் அன்பால்நெகிழ் பத்திப்
பண்ணிற்றுதி செய்தேவினை படவென்றவர் கதைகள்
மண்ணிற்றிகழ் கலையார்தளி தாராசுரத் தானை
எண்ணிப்பணி அடியார்களை எய்தாவினை தானே.....3
அண்ணித்தவன்= அணுகி அருள்செய்த ஈசன்
கோணில்விரி வானில்மினும் உடுவாயுளன் தாளைப்
பூணும்சிர முடைத்தொண்டரின் பொற்பில்திகழ் வாழ்வைக்
காணும்சுவர் சிற்பத்தளி தாராசுரத் தானை
பேணும்குணம் உடையார்களைப் பிடியாவினை தானே....4
கோண்=அணுவிலும் நுண்மைத்து
வெளியில்நட மிடுவான்கழல் விரைமென்மலர் தூவி
தெளிபத்தியில் தொண்டாற்றிய திடசித்தரின் உய்வை
உளிசொல்கதை சிற்பத்தளி தாராசுரத் தானை
அளியும்மனத் தொடுவாழ்த்திடில் அடையாவினை தானே....5
ஆலம்கறை கண்டன்கழல் அணிவாரவர் தொண்டை
காலம்நிலைத் திடச்செய்புகழ் காணத்தரும் சிற்பம்
ஞாலம்தனில் செப்பும்தளி தாராசுரம் சென்று
சூலன்றனைத் தொழுவார்களைத் தொடராவினை தானே....6
எல்லாமவன் அருளாகிடும் என்றேநினைத் தன்பால்
சொல்லாலுயர் செயலால்விழுத் தொண்டாற்றியர் உய்வை
கல்லாலொரு கதைசொல்தளி தாராசுரம் சென்று
வல்லான்கழல் தொழுவார்களை மருவாவினை தானே....7
தாயாயொரு பெண்ணுக்கருள் தந்தானவற் கன்பால்
ஓயாதவன் பணியேசெயும் உறுநர்தம துய்வை
தேயாஒளிச் சிலைசொல்தளி தாராசுரம் தன்னில்
சேயான்கழல் தொழுவார்களைத் தொடராவினை தானே....8
எரிபொங்கழல் அருவானவன் இருவர்தொழ அருள்வான்
விரிசெஞ்சடை ஈசன்கழல் விழைதொண்டரின் உய்வை
சரிதஞ்சொலும் சிற்பத்தளி தாராபுரம் மேய
பரியும்பரன் பாதம்தொழப் பற்றாவினை தானே....9
கொண்டல்தவழ் இமயத்தரன் குளிர்பூங்கழல் சூடி
மண்டன்பினில் பணிசெய்தவர் மறையாப்புகழ் வாழ்வைக்
கண்டின்புறச் சாற்றும்தளி தாராசுரம் மேய
அண்டன்கழல் அடைவார்தமை அடையாவினை தானே....10
No comments:
Post a Comment