Kamakshi temple in Hamm-Uentrop in Germany (http://kamadchiampal.com/index.php?Itemid=191)
(கலிவிருத்தம் - 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")
(சம்பந்தரின் இப்பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்றவாய்பாடு.
இலக்கணக் குறிப்புகள்:
ன்+த = 'ன்ற' என்று திரியும்.
ல்+ம = 'ன்ம' என்று திரியும்.
வான்த வழ்வெண் மதியன் செஞ்சடையன்
கான்த .னில்செங் கனலில் நட்டமிடும்
கோன்தன் கழலை கும்பிட் டன்பினில்சேர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....1
கூன்பி றையுடன் குதித்துப் பாய்நதியும்
தான்றன் சிரசில் தரித்த செய்யவனை
நான்ம றையும் நாடும் புண்ணியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....2
தேன்றாங் கலர்கள் திகழ அணிவானை
தோன்றாத் துணையாய்த் துதிப்போர்க் கருள்வானை
ஊன்றாங் குயிரில் ஒளியாய் இருப்பானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....3
வான்போல் பொழியும் வண்மை கொண்டவனை
ஆன்மேல் அமரும் ஐயனை எழில்மேவ
மூன்றாய்த் திகழும் முக்கட் சோதியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....4
தேன்வார்க் கும்பா செவியேற் கின்றானை
நான்காம் மறைகள் நவிலும் கழலானை
நோன்றார் மனத்தில் நுவலஞ் செழுத்தானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....5
தான்றான் உலகைத் தாங்கி அருள்பவனாம்
ஊன்றான் பதத்தை உள்ளன் பிலரகத்தில்
தேன்றான் சுவையோ திருப்பேர் சொலச்சுவைக்கும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....6
கூன்றான் விழுந்து குமையும் முதுமையிலும்
ஆன்றான் அமரும் ஐயா எனவழுதால்
ஈன்றா னாகி இரங்கிக் காப்பவனை
ஊன்றாப்(பு) அரனை ஓதி உய்ம்மனமே....7
ஏன்றான் நதியை எழிலார் சடைதன்னில்
தோன்றா அருவன் சோதி யானவனை
கோன்றான் நடத்தில் கோலங் கொண்டவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....8
தான் தோன் றியெனும் தந்தை தாயில்லா
வான் தோய் சிகர மலையன் சங்கரனை
ஊன் தேய் முதுமை உறினும் தொழவருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே. ...9
தான் தோன்றி=சுயம்பு.
மான் தீ மழுவாள் சூலப் படைக்கரத்தன்
வான்சூழ் கோள்கள் மாறா தியக்குபவன்
ஊன்சேர்ந் துருக உன்னு வார்க்கருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....10
No comments:
Post a Comment