August 21, 2012

திருவேடகம்

(திருமுக்கால் அமைப்பில்.
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா)


பற்றன லிலேடதும் பசுமையாம் ஏடகப்
புற்றர வினையணி வீரே
புற்றர வினையணி வீருமைப் புகலென
உற்றவர் உறுவதும் உய்வே....1

(பற்றும் அனலில் ஏடதும் பசுமையாம்)

அலைபுனல் எதிர்த்தெழு அந்தமிழ் ஏடக
கலைமதி புனைசடை யீரே
கலைமதி புனைசடை யீருமை வணங்கிட
இலையென விலகிடும் இடரே....2

வையையி லேடெதிர் வந்தடை ஏடக
மெய்யணி வெண்பொடி யீரே
மெய்யணி வெண்பொடி யீருமை நினைபவர்
வெய்யவல் வினைத்தளை விடுமே....3


ஆற்றிலி டருந்தமிழ் அவையடை ஏடக
நீற்றினைப் புனைநுத லீரே
நீற்றினைப் புனைநுத லீரும தலர்க்கழல்
ஏற்றிட நிறைந்திடும் இனிதே....4

தெறிபுனல் எதிரெழு செந்தமிழ் ஏடக
வெறிமலர் புனைசடை யீரே
வெறிமலர் புனைசடை யீருமை நினைபவர்
நெறிதனில் அடைவதும் நிறைவே....5

 

ஒருபுன லிடுதமிழ் உயர்ந்தெதிர் ஏடக
தருநிழல் அமர்ந்தருள் வீரே
தருநிழல் அமர்ந்தருள் வீரும தடிதொழ
இருவினைத் துயரதும் இலையே....6

விரைநதி யிடுதமிழ் வென்றடை ஏடக
வரைமக ளொருபுடை யீரே
வரைமக ளொருபுடை ஈருமை தொழுதிடப்
புரைமலி பவமதும் போமே....7

விசையுறு புனலெதிர் வெல்தமிழ் ஏடக
இசைவிழை செவியுடை யீரே
இசைவிழை செவியுடை யீரும கழல்தொழும்
இசைவுடை யோர்க்கிலை இடரே....8

கோலநல் லிசைத்தமிழ்க் கூடவை ஏடக
நீலகண் டமதுடை யீரே
நீலகண் டமதுடை யீரும தடிதொழ
சீலமு டன்வரும் தெளிவே....9

உய்ந்நெறி காட்டிடும் ஒண்டமிழ் ஏடக
மெய்ந்நெறி யேஉகப் பீரே
மெய்ந்நெறி யேஉகப் பீருமை உன்னுவர்
கைதொழு தடைவருன் கழலே....10

No comments:

Post a Comment