December 10, 2012

திருக்கானூர்

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)

 

திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

 

தளைத்து வினைசெய் யிடர்தீர்க்கும்

...சடையன் செந்தாள் மலர்பற்றிக்

களத்தில் விடத்தைக் கொண்டருளும்

...கதியே எனநீ அடைநெஞ்சே

தளத்தில் வெளியில் நடம்செய்யும்

...தனியன் புரத்தை நகையாலே

கொளுத்தும் ஈசன் உறைகோவில்

...கொள்ளி டஞ்சூழ் கானூரே....1

 

தளம்=மேடை, வெளி=ஆகாசம்.

களம்=தொண்டை.

தனியன்=ஒப்பில்லாதவன்.

 

இறைவன் ஈசன் என்றுணர்ந்து

....ஏத்திப் பணியும் அன்பர்க்கு

நிறைவைத் தருமே நிமலன் தாள்

....நினைந்து அடைநீ மடநெஞ்சே

நறைசேர் மலரால் நன்மாலை

....நயமாய்ச் சூடும் நம்பனவன்

குறைகள் தீர்ப்பான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....2

 

நறை=தேன்.

 

எஞ்சும் நாளில் முதுமையினில்

....இடர்கள் பலவும் பட்டுழல

அஞ்சும் காலன் வருமுன்னே

....அரன்பேர் போற்றி அடைநெஞ்சே

பிஞ்சு நிலவும் பேரலையாய்

....பெருகும் நதியும் கொன்றையுமே

குஞ்சி வைத்தான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....3

 

ஆறு தலதை விழைமூப்பில்

....அண்டும் துன்பம் எத்தனையோ

நீறு புனைந்து நெகிழ்ந்துருகி

....நேயன் போற்றி அடைநெஞ்சே

ஆறு சடையன் ஆலின்கீழ்

....அமரும் தவம்செய் போதமருள்

கூறும் ஒருவன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....4

 

சீரார் இளமை தேயபிணி

....தேடி வரவும் இயமபடர்

ஓரா துயிரைக் கொள்ளுமுனம்

....உய்வை நாடி அடைநெஞ்சே!

காரார் கண்டன் கதியாகி

....கனிவோ டருளும் கழலனவன்

கூரார் மழுவன் உறைகோயில்

.. கொள்ளி டஞ்சூழ் கானூரே....5

 

தள்ளும் வயதில் தடுமாறித்

....தடிக்கை கொண்டு பிணிமூப்பில்

விள்ள முடியா வேதனையை

....விட்டு விலக அடைநெஞ்சே

அள்ளும் மலரின் மணமாக

....அருளும் வள்ளல் ஒளிர்பிறையை

கொள்ளும் சடையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....6

 

தள்ளும் வயது என்றால், நடக்க முயலும்போது சுதாரிக்க இயலாமல் 'தள்ளும் 'வயதான முதுமையில் என்ற பொருளில்.

 

காலக் கணக்குத் தவறாமல்

....காலன் வந்து நிற்குமுன்னே

மூலப் பொருளாம் முன்னவனின்

....முடி,தாள் போற்றி அடைநெஞ்சே

சீலச் சுடராய்த் திகழ்கிறவன்

....தேடி அருளைத் தந்திடுவான்

கோலப் பிறையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....7

 

தொடுக்கும் போராய் பிணிவாட்டும்

....துன்பை எண்ணிக் கலங்காமல்

உடுக்கை ஒலியில் நடமாடும்

....ஒருவன் போற்றி அடைநெஞ்சே

எடுக்கும் பிறவிக் கடல்தாண்ட

....இணையில் அருளை வரமாகக்

கொடுக்கும் பெருமான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....8

 

பொன்றும் காலம் வந்திடுமுன்

....புனிதன் தாளே கதியென்று

ஒன்றும் சித்தம் கொண்டன்பில்

....ஓதி உய்ய அடைநெஞ்சே

கன்றின் தாயாய்ப் பேணுபவன்

....கனிவாய் அருட்கண் பார்த்திடுவான்

கொன்றை சூடி உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....9

 

ஆண வமெனும் மாசுதனை

....அகற்றி உய்வை அடைநெஞ்சே

வீண டைவதோ இப்பிறவி

....விருதாய் மூப்பில் வருந்துவதென்

காணக் கண்செய் தவமாகக்

....கருணை தவழும் நுதல்விழியன்

கோணற் பிறையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....10

No comments:

Post a Comment