September 08, 2010

சிவனை துதி மனமே !

 

(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்ததுஅரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)
"
கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் புளிமா
"

நிதியவன் நெஞ்சில் வதிபவன் என்றும்
...
நெகிழ்வுறு அன்பில் திகழ்ந்திடு மனமே!
சுதிநிறை பண்ணில் துதியிசை தன்னில்
...
சுகமுறு அன்பர் அகமதில் வருவான்!
கதியவன் என்று பதிகமும் சொல்லிக்
...
கழலிணைப் பற்றின் பழவினை தீரும்!
புதியவன், கங்கை நதி,மதி சூடி
...
புகழினை ஓது! இகமதில் நிறைவே!

 

பதவியும் பேரும் சதமென லாமோ?
...
பரமனின் அன்பே நிரந்தர மாகும்!
நுதலுடைக் கண்ணன் விதமவன் நாமம்
...
நுவலுவர் என்றும் நவையினை வெல்வார்!
இதமதைச் சேர்க்கும் பதமதை எண்ணின்
...
இயமனைச் சாடும்;பயமதைப் போக்கும்!
இதயமும் கோவில் உதயமாய்த் தோன்றும்
...
இணையடி ஆகும் புணைநவில் நெஞ்சே!

 

சிரமதில் கங்கை கரமதில் ஓடு
...
திகழ்ந்திடு சாம்பல் உகந்திடு மேனி
சரமெனக் கொன்றை உரகமும் சூடி
...
சவமெரி காட்டில் நவமுற ஆடும்
பரமனின் தாளை சரதமென் றெண்ணு!
...
பவமதில் சூழும் அவமதைப் போக்கும்!
அரனவன் நாமம் வரமென வேற்றும்
...
அடியவர் அன்பன் வடிவுறு நெஞ்சே.

 

உணர்வினில் பக்தி மணமது வீசும்
...
உயர்வுறு பாடல் மயர்வறச் செய்யும்
தணலுருக் கொண்டான் கணங்களின் ஈசன்!
...
தவவுரு மேவும் சிவகுரு போற்றி
இணைகழல் பற்றித் துணையவன் என்றால்
...
இகமதில் நாளும் புகல்தரும் வள்ளல்
இணர்மலர் மாலை கொணர்ந்தவன் மார்பில்
...
இலங்கிடச் சூட்டி நலம்பெறு நெஞ்சே
.

மயர்வு=அஞ்ஞானம்.
இணர்=பூ,பூங்கொத்து

 

கன்றினுக் கெனவே மன்றினில் நியாயம்
...
காத்திடு மனுவைக் காத்திடும் இறைவன்
கொன்றையம் மலரை பொன்முடி அணிந்து
...
கொண்டிடும் தயையில் தொண்டனுக் கருள்வான்
ஒன்றவன் தழலாய் நின்றவன் உமையின்
...
உற்றவன் மதனைச் செற்றவன் பதத்தை
நன்றென மனதில் என்றுமே நினைத்து
...
நஞ்சுடை மிடறன் நெஞ்சுறு மனமே!

 

சுட்டெரி ஒளிவீழ் விட்டிலின் நிலையில்
...
துக்கமாம் மயலில் சிக்கிடும் மனமே!
கட்டெனும் வினையில் பட்டுழல் வதுமேன்?
...
காத்திடு மிறைவன் பார்த்தருள் புரிவான்!
கொட்டிடு முழவில் தட்டிடும் துடியில்
...
கூத்தனின் நடனம் சேர்த்திடும் இதமே!
மொட்டவிழ் மலர்கள் இட்டவன் பதத்தை
...
முன்னிட தருவான் இன்னருள் தனையே.

முன்னுதல்=கருதுதல்

 

குந்தகம் செய்யும் பந்தமாம் கட்டில்
...
கொண்டிடு துன்பம் மண்டிடும் வேளை
இந்தினைச் சூடும் செந்தழ லோன் தாள்
...
எண்ணிடத் தீரப் பண்ணிடு வானே!
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற
...
ஒப்பிலாத் தேவைத் துப்பெனக் கொள்வாய்!
சுந்தரன் நஞ்சக் கந்தரன் தன்னைச்
...
சுற்றமென் றேற்றிப் பற்றிடு நெஞ்சே
!

துப்பு=பற்றுக்கோடு.
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற = இசைவாணன் பாணபத்திரனுக்காய் விறகு விற்பவனாய் வந்துசிவபெருமான் அருளியது
.

 

புனைசடை தன்னில் புனைமலர் சூடி
...
புடையுமை பங்கன் நடமதைச் செய்யும்
கனைகழல் வேண்டின் வினைதனை மாய்க்கும்
...
கருணைசெய் தெய்வம் குருவவன் போற்று!
தினையள வேனும் நினைபவர்க் கும்தன்
...
திருவருள் தன்னைத் தருமவன் அன்பில்
நனைபவர் தாமே தனமுடைச் செல்வர்?
...
நலம்தரும் நாமம் வலம்தரும் நெஞ்சே.

புனைமலர்=புன்னைமலர்(இடைக்குறை)

 

தரிசென வாழ்ந்து மரித்திட லாமோ?
...
சகமிதில் வாழும் தகவினைக் கேளாய்;
எரிதவழ் கானில் புரிநட மேற்றும்
...
இறையடி யார்கள் மறையெனப் பாக்கள்
வரிசையில் தேனார் பரிசினில் தந்த
...
வகையினை ஓர்ந்தே அகமகிழ் வோடு
சொரியருள் தேவைப் பரிவுடன் எண்ணி
...
துதிபுகழ்ப் பாடி கதிநினை நெஞ்சே.

தரிசு= உபயோகமில்லாத நிலம்

 

வெய்யவல் வினையில் நைவதென் நிதமும்
...
வென்றிடும் வழியை நன்கறிந் திடுவாய்;
துய்மலர் அலங்கல் கைதொழு (து)இடவே
...
துன்பமும் விலகும் இன்பமும் மலரும்
பெய்கழல் பணிந்தால் எய்ப்பது மறையும்
...
பிஞ்ஞக னவனின் அஞ்செழுத் தைநினை
மெய்தனில் இடங்கொள் மைவிழி உமையின்
...
வெண்மதி சடையன் நண்ணிடு மனமே.

எய்ப்பு=தளர்வு

No comments:

Post a Comment