(அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')
பூக்கும் மலர்கள் பொலிய இலங்கும் பொற்றாள் வினையாவும்
தீர்க்கும் அடியார்க் கருளை சேர்க்கும் திருத்தாள் எரிகானில்
சேர்க்கும் லயத்தில் துடியார் நடமே செய்தாள் புகழ்சேர்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே. …. 1
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தர்தாம் சாற்றித் தொழும்நற்றாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. …. 2
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தனும்செஞ் சடையன் தொழும்தண்தாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. …. 3
பாவை புனித வதியாம் அம்மை பற்றிப் பரவும்தாள்
கோவை கைலை வெற்பில் ஆடல் குறித்தே பணியும்தாள்
நாவை பழக்கி அஞ்சக் கரத்தை நவில வினைசெய்நோய்
யாவை யும்தீர்த் தருளும் செல்வன் ஆரூர் அரன் தாளே. …. 4
துண்டப் பிறையும் விண்ணின் நதியும் துலங்கும் அணியாகக்
கண்டு நிகர்த்த மொழியாள் உமையின் காந்தன் நடம்செய்தாள்
செண்டு மலர்த்தார் சூட்டி அடியார் சிந்தை குளிரும்தாள்
அண்டம் எல்லாம் கடந்து நின்ற ஆரூர் அரன் தாளே. …. 5
கன்றிச் சிவக்கத் தெருவில் விறகுக் கட்டைச் சுமக்கும்தாள்
தொன்று கைலையில் அம்மை பாடத் தூக்கி நடம்செய்தாள்
மன்றில் சக்தி நாணும் படியே வாகாய் உயர்பொற்றாள்
அன்று தூதாய் நண்பர்க் கலைந்த ஆரூர் அரன் தாளே. …. 6
பொருத்த மான சதங்கை கழலில் பொலிய ஒலிசெய்தாள்
வருத்தும் வினைசெய் நோயைத் தீர்க்கும் மருந்தா கிடும்பொற்றாள்
கருத்தில் என்றும் நிலையாய் நின்று காக்கும் வரமாம்தாள்
அருத்தி யோடு பத்தர் போற்றும் ஆரூர் அரன் தாளே. …. 7
தலையில் அரவு கொன்றை மதியும் தாங்கி அருளும்தாள்
அலையும் மனத்தை அடக்கி அருளில் அணைக்கும் புனிதத்தாள்
கலையும் கனவாம் உலக வாழ்வை கதியில் செலுத்தும்தாள்
அலர்கள் தூவி அமரர் போற்றும் ஆரூர் அரன் தாளே. …. 8
பரியும் தயையின் திறத்தை அன்பர் பாடி வணங்கும்தாள்
திரியும் நிலையில் பலியைத் தேரத் தினமும் அலையும்தாள்
விரியும் வெளியில் நடனம் ஆடி விந்தை புரியும்தாள்
அரியும் அயனும் அடைதற் கரிய ஆரூர் அரன் தாளே. …. 9
தையல் உமையை இடது பங்கில் தாங்கி அருள்வான் தாள்
கையில் சூலம் மழுதீ யோடு கலைமான் உடையான் தாள்
மெய்யில் நீறு பூசும் அடியார் வேண்டித் தொழும்நற்றாள்
ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன் தாளே. …. 10
No comments:
Post a Comment