February 19, 2013

திருக்கண்டியூர்

 

(அறுசீர்விருத்தம். 'மா கூவிளம் கூவிளம்' என்ற அரையடி வாய்பாடு)

 

நோவி னாலுயிர் வாடிட
...நொந்து சொந்தமும் கூடுமுன்
நாவி னித்திடும் பேரனை
...நம்பி போற்றிடும் பத்தியில்
வாவி சூழ்கமழ் பூம்பொழில்
...மஞ்சு லாவிடும் வானுயர்
கோவி லானுறைக் கண்டியூர்க்
...குறுகி உய்ம்மட நெஞ்சமே....1

குறுகி=அணுகி

நிந்தை பட்டுழல் மூப்பினில்
...நெருங்கும் காலனைக் காணுமுன்
எந்தை ஈசனார் பொற்கழல்
...ஏத்தி போற்றிகள் சொல்லிட
முந்தை ஊழையும் தீர்ப்பவன்
...மொய்க்கும் வண்டுசூழ் பூமலி
கந்த மார்பொழிற் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....2

வேளை வந்திட அந்தகன்
...வீசும் பாசமும் அண்டுமுன்
கோளை வானொளிர் மீனினைக்
...குறித்த பாதையில் ஓட்டுவான்
தாளை பற்றிடும் சிந்தையாய்த்
...தஞ்சம் வேண்டிடக் காப்பவன்
காளை வாகனன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....3

வேட்டுப் பேணிய யாக்கையை
...விட்டு யிர்செலு முன்னமே
ஆட்டுக் காலெடுத் தாடிடும்
...ஐயன் உண்பலி தேடுவான்
சூட்டும் கொன்றையும் தாழ்சடை
...மேவியொ ளிர்ந்திடும் ஓர்விழி
காட்டும் நெற்றியன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....4

நோதல் சேர்பிணி மூப்பினில்
...நொந்து பேசொணாப் போதினில்
பாத கன்யமன் வீசிடும்
...பாச மோடுயிர் ஏகுமுன்
நாதன் வெண்டலை யிற்பலி
...நாடி நல்லிசை மாந்திடும்
காதன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....5

கண்ணி லாதவன் வீசிடும்
...கால பாசமும் அண்டுமுன்
வெண்ணி லாத்துளி விண்ணதி
...வேணி சூடிய செய்யவன்
புண்ணி யக்கழல் பற்றிடின்
...பொங்கும் அன்பினை நெற்றிசேர்
கண்னில் காட்டரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....6

கண்ணிலாதவன் = அந்தகன் (இயமன்) இரக்கமில்லாதவன் என்னும் பொருளில்.

 

வெய்ய ழல்சுடு காட்டினில்
...வெந்து சாம்பலென் றாகுமுன்
தைய லாளுமை பங்கனின்
...தாளி ணைத்துணைவேண்டியே
மெய்யன் உண்பலித் தேறிட
...வேதன் வெண்டலை ஓடுடைக்
கையன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....7

கொண்டு வந்ததென்? போகையில்
...கொண்டு செல்வதென்? என்பதைக்
கண்டு மெய்யினைத் தேர்ந்திட
...கங்கை யான்கழல் சூடியும்
மண்டும் பேரருள் போற்றியை
...மகிழ்ந்து ஏற்பவன் நஞ்சையுண்
கண்டன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....8

உரிய வன்யமன் வந்திட
...உடலை விட்டுயிர் ஏகுமுன்
வரிய தள்தனை ஆடையாய்
...வரித்து மேனியில் ஏற்றவன்
திரியு முப்புரம் தீயெழ
...சிரித்த வன்விடத் தால்களம்
கரிய வன்பதி கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....9

மங்க லாகிடும் பார்வையும்
...மறலி வந்திடு முன்னமே
வெங்க டம்தனில் ஆடுவான்
...விரிந்த தாழ்சடை கொண்டவன்
செங்கழல் மறை போற்றிடும்
...திங்கள் கொன்றை பாம்புடன்
கங்கை சூடரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....10

No comments:

Post a Comment