'கலித்துறை-- மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்' - வாய்பாடு.
'தான தானன தானன தானன தானன'.
அடி ஈற்றுச் சீரைத் தவிர ஏனைய சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.)
(சம்பந்தர் தேவாரம் - 2.9.1 - "களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்")
பாத கம்செயும் ஊழ்வினை பாற்படு துன்பெனும்
ஏதம் நீங்குமொர் உய்வுற எய்திடு நெஞ்சமே
போதன் ஆலடி நீழலில் புண்ணிய னாயருள்
நாதன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....1
எய்தல்=அடைதல்
ஏதம்=கேடு.
என்பு மாலையன் ஏறமர் நாயகன் பூங்கழல்
அன்பி .னால்தொழு(து) ஆட்பட அண்டிடு நெஞ்சமே
நன்பதி யானவன் நாடுவர் நைவினை தீர்த்தருள்
நம்பன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.... 2
சிக்க லாக்கிடும் தீவினை யால்தொடர் துன்பற
சொக்கன் சேவடிச் சீருரைத் தேகிடு நெஞ்சமே
இக்கு வில்லினை ஏந்துவேள் தீப்படச் செய்தவன்
நக்கன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....3
புயலென் றேவரும் புன்வினை தாங்கிடச் செய்திடும்
தயைநி திக்கழல் சார்ந்துய சென்றடை நெஞ்சமே
பெயலெ னப்பொழி பெற்றியன் முப்புரம் நீறுசெய்
நயனன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....4
தொல்லை செய்வினைத் துன்பறச் சோதியன் பேரினைச்
சொல்லி அன்பரும் சூழ்ந்திடச் சென்றடை நெஞ்சமே
தில்லை அம்பலச் சிற்பரன் ஏழையர்க் கருள்செய்
நல்லன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....5
சிந்தை நொந்திடர் செய்திடும் வெவ்வினை நீங்கிட
சுந்த ரேசனைத் தோத்தரித் தேயடை நெஞ்சமே
செந்த மிழ்தனில் தேன்சுவைப் பண்ணினை மாந்துவன்
நந்தி ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....6
விட்டி டாதிடர் விஞ்சிடும் வெவ்வினை வென்றிட
நிட்டை யன்தயை நேடிடச் சென்றடை நெஞ்சமே
பிட்டை யுண்டிட பெண்ணவள் கூலியாய் ஆடிய
நட்டன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....7
நேடி=தேடி என்னும் பொருளில்.
விதிய தன்வழி மேவிடு வாழ்வினில் உய்வுறப்
பதிய வன்கழல் பற்றிடச் சென்றடை நெஞ்சமே
கதிய வன்வழி காட்டுவன் செஞ்சடை மீதொரு
நதியன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....8
கானல் நீரெனக் காணுமிவ் வாழ்வினில் உய்வுற
மோன மாதவன் தாள்தொழு தேயடை நெஞ்சமே
ஆனைத் தோலுடை அங்கணன் அஞ்செழுத் தானருள்
ஞானன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே. ...9
தோணி யாய்பவத் துன்பினைத் தாண்டிடச் செய்குவன்
பூணென் றேஅராப் பூண்பவன் சென்றடை நெஞ்சமே
ஆணிப் பொன்னவன் அன்பினுக் காட்படும் பாம்பரை
நாணன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....10
No comments:
Post a Comment