October 09, 2012

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே

(வட திருமுல்லைவாயில்)

 

(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு)

துன்னும் இடரிடைத் துவளும் நெஞ்சமே
....துயரை வெல்வழி சொல்லுவேன்
முன்னைப் பழையவன் மூல மானவன்
....முக்கண் நுதலினன் முடிவிலான்
தன்னை நினைப்பவர் தமக்குத் தயையினைத்
....தந்து காத்திடும் இறையவன்
வன்னன் வடமுல்லை வாயில் மாசிலா
....மணியைத் தொழவினை மாயுமே....1

துன்னும்= சூழ்ந்துவரும்
வன்னம்=அழகு.

நொந்தி டரதனில் நோகும் நெஞ்சமே
...நொடியா வழியினை நுவலுவேன்
சுந்த ரன்கறை சூழ்ந்த கந்தரன்
...துங்க நதியுடை சடையினன்
வெந்த நீறணி மெய்யன் முப்புரம்
...வேவ சினமுற விழித்தவன்
மைந்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....2

விஞ்சும் இடரினில் வீழும் நெஞ்சமே
...விலகும் வழியினைக் கூறுவேன்
கஞ்ச மலர்ப்பதம் கருதும் அன்பரைக்
...கனிவோ டருளிக் காப்பவன்
நஞ்ச மமுதென நாடி விண்ணவர்
...நலத்தை எண்ணியே உண்டவன்
மஞ்சன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....3

சிரமம் தொடர்ந்திடச் செய்யும் துன்பதும்
...தீரும் வழியிது நெஞ்சமே
மரக தாம்பிகை வாமம் கொண்டவன்
...மன்றில் ஆடிடும் வல்லவன்
மரம தடியமர் மாத வத்தினன்
...மவுன மாயருள் செய்பவன்
வரதன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....4

பள்ள மேடுகள் பற்றும் வாழ்விதில்
...படிந்து இடருறும் நெஞ்சமே
விள்ள லாகவொர் வெண்ணி லாவுடன்
...வேக மிகுநதி அணிபவன்
அள்ளி வழங்கிடும் அன்பில் கனிபவன்
...ஆடல் மன்றினில் புரிகிற
வள்ளல் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....5

 

அல்லல் தன்னிலே ஆழும் நெஞ்சமே
...அகலும் வழியிது கூறுவேன்
முல்லை நறுங்கொடி மூலம் தன்னையே
...முந்தி காட்டிய மூலவன்
'எல்லை யொன்றிலா ஏற்றம் கொண்டவ
...எளியை நீயென இரங்குவன்
வல்லன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....6

குளமார் கண்ணொடு குமுறும் நெஞ்சமே
...குறைகள் தீர்வழி சொல்லுவேன்
உளமார் உணர்வினில் உற்ற அன்பொடு
...உமையொர் பங்கனின் நினைவொடு
தளமார் வண்ணமாய் சாற்றும் பாமலர்
...தன்னில் தங்கிடும் இறையவன்
வளமார் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....7

விதியி தோவென வெம்பும் நெஞ்சமே
...வெல்லும் வழியிது சொல்லுவேன்
'கதியுன் தாள்'எனக் கத்தும் சிறுவனைக்
...காக்க மறலியை உதைத்தவன்
நதியும் மதியுடன் நஞ்சார் நாகமும்
...நயமாய் சடையில் அணிமுக
மதியன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....8

வீண்பி றவிச்சுழல் விட்டு வெளிவரும்
...விதத்தைச் சொல்லுவேன் நெஞ்சமே
பூண்ப .னணியெனப் பொன்னார் கொன்றையைப்
...பொங்கும் அலைநதி சடையினன்
காண்ப .னன்புறு கண்ணால் எளியரைக்
...காக்கும் வல்லவன் மறைதொழும்
மாண்பன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....9

சித்த மலமதில் திகைக்கும் நெஞ்சமே
...தெளியும் வழியினைச் சொல்லுவேன்
வித்தில் மரமென விறகில் தீயென
...வெளியில் தெரிந்திடா திருப்பவன்
பித்த .னவன் திருப் பேரை உரைத்திடில்
...பீழையைத் தொலைத்திடும் இறையவன்
மத்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....10

No comments:

Post a Comment