October 09, 2012

உயிரானான் போற்றி


(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடிவாய்பாடு)

அம்மையொ டாடிடும் ஐயன்
...அடியரின் உளங்கவர் கள்வன்
பொம்மைக ளாகவே நம்மைப்
...புவியினில் நடித்திட வைப்பான்
செம்மையில் திகழுறும் மெய்யன்
...சிகையினில் நதிமதி சூடும்
செம்மலின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....1

ஓதிடும் நான்மறை ஏற்றும்
...ஒருதனி முழுமுத லாவன்
கோதிலன் குணநிதி யாகக்
...குறைகளை தீர்த்திடும் ஈசன்
மாதிடம் வைத்தவன் ஆலம்
...மணிமிட றுடைகறை கண்டன்
நாதியன் சேவடி போற்றி
...நம்பெரு மானடி போற்றி.

உருவமும் அருவமும் ஆவான்
...உடுக்கையும் சூலமும் ஏந்தும்
மருவறு பிறைதனைச் சூடி
...மன்றினில் ஆடிடும் ஐயன்
இருவினை தருமிடர்த் தீர
...இணையடி தொழவருள செய்வான்
திருவனின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....3

ஆறுதல் தந்திட வேண்டி
...அனுதினம் தொழுதிடும் அன்பர்
தேறுதல் பெற்றிடத் துன்பம்
...தீர்ந்திட இன்னருள் செய்வான்
ஊறிடும் பரிவினில் காக்கும்
...உமையவள் பங்குடை ஈசன்
சீறர வன்பதம் போற்றி
...சிவபெரு மானடி போற்றி....4

பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதிச் சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகப்புடன் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி....5

 

வார்சடை மேல்நதி யோடு
...மதியினைச் சூடிடும் ஐயன்
பேர்புகழ் பாடிடு வாரைப்
...பிணித்திடு வினைவிடு விப்பான்
கார்பொழி வாயருள் பெய்வான்
...கரமதில் கலனொடு பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....6

அவ்விடம் இவ்விடம் என்றே
...அனைத்திலும் அணுவிலும் உள்ளான்
செவ்விய தீந்தமிழ்ப் பாவில்
...திகழ்கிற பத்தியில் நிற்பான்
நவ்வியன் நான்மறை போற்றும்
...நாயகன் அடிமுடி காணா
செவ்வழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....7

செவ்விய=சிறந்த
நவ்வி=அழகு.


பேசுவர் அவனுடைப் பெற்றி
...பெரிதவன் தயைசெயும் பாங்கு
சாசுவ தமாயவன் அன்பு
...தன்னை எண்ணுவர்க் கையன்
பூசுவெண் ணீற்றனின் சீற்றம்
...பொடியென எயிலெரி செய்தத்
தேசுடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....8

அந்தஇ லங்கையின் வேந்தை
...அடர்த்தக மடக்கிய ஈசன்
குந்தக மாஇடர் செய்யும்
...கொடுவினை தீர்த்திடு மெய்யன்
செந்தமிழ்ப் பாவிசைத் தேனை
...செவிமடுத் தின்புறும் எம்மான்
செந்தழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....9

நெளியுநல் லுரகமு டன்வான்
...நிலவையும் நதியையும் சூடும்
கிளிகர மேந்துமை பங்கன்
...கேட்டினைத் தீர்த்தருள் செய்வான்
எளியரின் உறுதுணை யாக
...எங்கணும் நிறைந்தவன் காப்பான்
தெளிசடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....10

No comments:

Post a Comment