(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன".முதற்சீர் 'தானன' என்ற சந்தத்திலும் சில பாடல்களில் வரலாம்.பாடல்தோறும் ஈற்றுச்சீர் 'தனனா'. திருவிராகம் அமைப்பு. முடுகு ஓசை அமைந்த பாடல்கள்)
குணமுளன் உருகிடும் அடியரின் துணையவன்
நிணமுறு கலமுடன் பலிபெற அலைபவன்
தணலெரி கடமுடை தனியனின் உறைவிடம்
மணமலர் மலிபொழில் அணிதிரு வலமே....1
சதுரனாய் உலகுய முறைசெயும் கதியவன்
பதுமையென் றசைவுறும் படிச்செயும் இறையவன்
முதுமையில் பிணியினில் அருளரன் உறைவிடம்
மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே....2
பிட்டதை செய்பவள் பணியினில் துணையவன்
மொட்டவிழ் மலரிடும் அடியவர் இடரதும்
பட்டிட அருள்செயும் பசுபதி உறைவிடம்
மட்டலர் மலிபொழில் அணிதிரு வலமே....3
விதியதன் விளைவினில் வருமிடர் பொடிபட
நதியணி சடையினன் பதமலர் அருளுவன்
சதியுமை இடமதில் உடையவன் உறைவிடம்
மதியண விய மதில் அணிதிரு வலமே....4
வடிவுடை உமையவள் பதியவன் கடமதில்
துடியடி ஒலியினில் நடமிடும் தனியவன்
கடிகமழ் மலரணி அழகனின் உறைவிடம்
அடியவர் வினைகெட அடைதிரு வலமே....5
தண்மதி அலைநதி சடையுடை சிவனவன்
வெண்பனி மலையரன் மென்மலர் பதம்தொழ
விண்ணையும் தருகிற விமலனின் உறைவிடம்
வண்புனல் மலரடி பணிதிரு வலமே....7
கலைமதி அணிபெறும் சடையினன் கழல்தொழ
உலைவுற இடர்செயும் வினையழி வகைசெயும்
நிலைபெறும் அருள்தரும் நிமலனின் உறைவிடம்
அலைநதி அடிதொழ அணைதிரு வலமே....8
பணியினை சிரமதில் அணிபவன் அடியரின்
பிணியினில் இதமுற அருள்கிற அவுடதம்
அணிமையில் துணையென வருபவன் உறைவிடம்
மணிநதி மலரடி பணிதிரு வலமே....9
பழிவிட அலைநதி சடைதனில் அடையுற
விழிநுதல் உடையவன் வெளிர்பொடி அணிபவன்
வழியெலாம் இசைபொழி துதியுடன் பரமனை
வழிபடும் அடியவர் மகிழ்திரு வலமே....10
No comments:
Post a Comment