(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
கலைவுறா பத்தியினில் கண்ணாரக் காணவேண்டித்
தலைவனை தில்லையினில் தரிசிக்கும் நந்தனுக்காய்
விலகுவாய் கொஞ்சமென்று விடைக்குரைத்த கைலாய
மலையினான் திருப்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....1
திருநாளைப் போவார்தன் தீராத அன்புடனே
ஒருநாளே தரிசித்தால் உய்யும்நாள் எனவேண்டி
வருவாரை விடையேநீ மறைக்காமல் ஒதுங்கென்றான்
இருதாளை புன்கூரில் ஏத்தவினை மாயுமன்றே....2
நீரடையும் வேணியன்பேர் நினைந்துருக வந்தருளும்
பூரணனைக் காணவரும் புனிதருக்காய் விடையொதுங்கும்
ஆரணிசேர் புன்கூரின் ஆடவல்லான் தாள்தொழவே
போரணியாய் வருவினையை புறங்காணல் எளிதாமே.3
தந்தையாய்த் தாங்குவான் தாள் தரிசித்தே உய்யவந்த
நந்தனார் வழிமறைக்கும் நந்திசற்று விலகவைத்த
அந்தமார் புன்கூரின் அங்கணனை தொழுவாரின்
சிந்தையார் தீவினைகள் தீபுக்கப் பஞ்சாமே....4
சிரஞ்சேர்கை குவியநிதம் சிவனைநினை அடியாரின்
உரஞ்சேர்மெய்த் தொண்டினுக்கே உவகையுடன் அருள்செய்யும்
பரஞ்சோதி மேவுகின்ற பதிபுன்கூர் கண்டுதொழ
வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே....5
கூவியரன் தாள்பற்றிக் குமுறுகிற பத்தனுக்காய்
தாவியெமன் தனைச்செற்ற தண்ணருளன் சேவினையே
ஏவியவன் நந்தனுக்கு இன்னருளில் விலகவைத்தான்
மேவியபுன் கூரடைய மேல்வினைகள் வீடுமன்றோ....7
நெஞ்சார நினைப்பவரின் நேயனவன் கைலையினில்
விஞ்சைசேரும் ஆடலினை மேவியவன் நந்தனுக்கு
பஞ்சார்வெள் ளேற்றினையே பையநகர் என்றருள்வான்
மஞ்சாரும் பொழிற்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....8
பஞ்சு=பஞ்சைப்போல் நிறத்திற்கு.
சோதித்தே அருள்வழங்கும் துங்கநதிச் சடையுடையான்
பாதித்தன் மெய்யினிலே பங்காக உமையுடையான்
ஆதித்தன் ஒளியாக ஆலின்கீழ் அமர்ந்தறங்கள்
போதிப்பான் புன்கூரைப் போற்ற வினை போகுமன்றே....9
எல்லை யில்லாத இன்னருள் புரிபவனின்
வெல்ல ஒண்ணாத மெய்சிலிர்க்கும் பேருரைத்து
வில்வ யிலைதூவி வேண்டுவாரின் ஐயனவன்
செல்வன் திருப்புன்கூர் சேர வினைத் தீருமன்றே....10
August 11, 2013
திருப்புன்கூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment