August 11, 2013

திருவீழிமிழலை

(திருமுக்கால் அமைப்பில். 1, 3-ஆம் அடிகள் அளவடி. 2, 4-ஆம் அடிகள் சிந்தடி. இடைமடக்கு அமைந்து வரும்.
4 விளம்
2 விளம் + மா
4 விளம்
2 விளம் + மா)


விரிமரை கொடுஅரி தாள்தொழ அடைபதி
திரிமுகில் மிழலையு ளீரே
திரிமுகில் மிழலையு ளீருமை விழைபவர்
புரிவினை தீருமப் போதே …1

நரைவிடை யீருமை
  அரிதொழ அடைபதி
திரைநதி மிழலையு ளீரே
திரைநதி மிழலையு ளீருமை மேவுவார்
புரைவினை விலகுமப் போதே…2

புரைவினை=பாவவினை.

தெறிவிழி மலர்கொடு தொழவரி அடைபதி
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமை நினைபவர்
செறிவினை விலகியே செலுமே…3

எண்ணிட நிறைமலர் விழிகொடு அடைபதி
தண்ணெழில் மிழலையு
  ளீரே
தண்ணெழில் மிழலையு ளீருமை நினைந்திட
நண்ணிய இடரிலை நலமே…4

படியினை அடியவர் பசியற அருளிய
படிபுகழ் மிழலையு ளீரே
படிபுகழ் மிழலையு ளீருமை எண்ணிடில்
பொடிபட இடர்வினை போமே…5

கூன்பிறை பாம்பொடு குதியலை சூடியே
தேன்பொழில் மிழலையு ளீரே
தேன்பொழில் மிழலையு ளீரும கழல்தொழ
ஊன்பிறப் பிலாநிலை உறுமே…6

ஊர்விடை அமர்ந்தவ உமையோர் பங்க,வான்
ஆர்பொழில் மிழலையு ளீரே
ஆர்பொழில் மிழலையுளீ ரும கழல்தொழ
தீர்வுறும் வினையிடர் திடமே…7

சாம்பலை மேனியில் தரித்தருள் தந்திடும்
தீம்பொழில் மிழலையு ளீரே
தீம்பொழில் மிழலையு ளீருமை தொழஎமை
நோம்படி செய்யிடர் நோமே…8

போதமும் மோனமாய் புரிந்தருள் தருகிற
கோதறு மிழலையு ளீரே
கோதறு மிழலையு ளீரும தடிதொழ
தீதறும் வளமுறும் திடனே…9

அக்கர மைந்தினை அடியவர் ஓதவும்
திக்கருள் மிழலையு ளீரே
திக்கரு மிழலையு ளீருமை நினைபவர்
தக்கநல் வாழ்வுறல் சதமே…10

திக்கு=ஆதரவு.

No comments:

Post a Comment