எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' அரையடி வாய்பாடு.
(சம்பந்தர் தேவாரம் - இலம்பையங்கோட்டூர்ப் பதிகம் - 1.76.1 )
விடியலை வேண்டியே துயருறும் மாந்தர்
...மிடியிலா வாழ்வினைப் பெற்றிட வேண்டும்
கடியதாம் சுடுதணல் சொல்லதும் வீசும்
...காற்றதன் வருடலாய் மேவிட வேண்டும்
பொடியினை பூசியே அஞ்செழுத் தோதிப்
...பூவிலைத் தூவியே நினைந்திடும் அன்பால்
அடியனேன் வேண்டுவ தடைந்திட அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....1
அறையலை வானதி சிரமதில் ஏற்ற
...அண்ணலே உன்னருள் தன்னையே கேட்பேன்
குறைமலி வாழ்விதைப் பொருள்பெறு வாழ்வாய்க்
...கொண்டிடப் பிறர்நலம் பேணிடும் தன்மை
பொறைகுணம் இரங்கிடும் உணர்வுடன் அன்பைப்
...பொழிந்திடும் மழையெனும் பொன்னுளம் மேவ
அறவனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....2
இரவெனப் பகலெனப் பொழுதினைப் படைத்தே
...இன்னருள் புரிந்திடும் எருதமர் தலைவா
பரவையில் துரும்பென அலைந்துழல் உலகில்
...பவமதைக் கடந்திட உன்கழல் பிடித்தே
பரவிடும் அடியரைப் பரிவுடன் அணைக்கும்
...பரமனே செந்தமிழ்ப் பாடலை விரும்பும்
அரசனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....3
சுமையென நோய்களும் தொடர்கிற மூப்பில்
...துணையுனைத் தேடினேன் துய்யனே ஈசா
எமையுன தலர்கழல் இணையடி நீழல்
...இடர்வினை தீர்த்துநல் இதமுறச் செய்வாய்
அமைதியும் தெளிவுறு ஞானமும் பெறவே
...அஞ்செழுத் தோதியுன் அருளினை கேட்பேன்
அமரனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....4
கண்ணியென் றிளம்பிறை கவினுறத் தோன்றக்
...கங்கையும் உடன் திகழ் கற்றைவார் சடையா
புண்ணிய .னேஉன பொற்கழல் தன்னைப்
...போற்றிடும் அடியவர்ப் புகலென நின்றுப்
பண்ணிசைத் தீந்தமிழ்ப் பாக்களைக் கேட்டே
..பரிவுடன் அன்பரைப் பார்த்தருள் புரியும்
அண்ணலே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....5
அழலென ஓங்கிய அண்ணலே அயன்மால்
...அறியவும் முடிந்திடா அடிமுடி யோனே
நிழலென எமைவினை நெரித்திடர் படுத்தும்
...நிமலனே துன்பினை நீங்கிடச் செய்வாய்
கழலிடு நடமதில் கனிந்துமே அம்மை
...காணவும் இசைக்கவும் அருளிய எங்கள்
அழகனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....6
தணிமிகு பனிமலைத் தலைவனே உமையாள்
...தனையொரு கூறுடை தாண்டவா தீராப்
பிணியெனும் முன்வினைப் பீழையை நீக்கி
...பீடுற வாழ்ந்திடும் பெற்றியை கேட்டேன்
பணியென உன்புகழ் பாடியே நாளும்
...பைங்கழல் தொழுதிடும் பத்தருக் கென்றும்
அணியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்கத் தரனே....7
தணி=குளிர்ச்சி. பீழை=துன்பம்.
உமையலால் துணையென ஒருவரும் இல்லை
...உமதிணை கழலினை உன்னினேன் ஐயா
இமையதாய்க் காத்தருள் என்றுமை வேண்டி
...இணையிலா உம்புகழ் ஏற்றிடு வேனின்
சுமையதாம் ஊழதன் துன்பினைச் சின்னத்
...தூசென ஊதிடும் துய்யனே நஞ்சுண்
அமுதனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....8
வரியதள் உடுத்துவெண் மதிநதி யோடு
...மணமலர்க் கொன்றையைச் சூடிய முடியும்
எரியழல் கானதில் இணையிலா ஆடல்
...ஈர்ப்புடன் ஆடிடும் இன்னருட் தாளும்
அரியயன் அலைந்துமே அடைந்திடா வண்ணம்
...அழலென உயர்ந்தயெம் அதிசய மான
அரியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....9
கீற்றென வெண்பிறை சூடிடும் சிவனே
...கெடுவினை தருதுயர் தீர்த்திடு முன்னைச்
சாற்றியே 'அருள்கஎம் சங்கரா' என்று
...தாளினைப் பிடித்தழும் பத்தனைக் காக்கச்
சீற்றமோ டெமனைசெங் கழலினால் உதைத்தச்
...செய்யனே சடைதனில் திகழ்தரும் கங்கை
ஆற்றனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....10
No comments:
Post a Comment