August 20, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்

 

 

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு

பிஞ்சு மதியை அணிகின்ற
    ....பெண்ணோர் பங்கன் அடியார்கள்
தஞ்சம் என்றே கழல்பற்றின்
  ....தாங்கி அருளும் ஈசனவன்
நஞ்சை உண்ட கறைக்கண்டன்
  ....நாடி உறையும் திருக்கோவில்
அஞ்சொற் கிளிகள் நிறைசோலை
    ....ஆவூர்ப் பசுப தீச்சரமே....1

ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற
...உமையோர் பங்கன் புகழ்பாடித்
தெளியும் ஞானம் பெறவேண்டித்
...தேடும் அன்பர்க் கருள்செய்வான்
துளிவெண் பிறையை அணிகின்றத்
...துணைவன் மகிழ்ந்தே அமர்கோவில்
அளிகள் முரலும் பொழில்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே. ..2

ஈர்க்கும் தேசாய் ஒளிர்கின்ற
...எம்மான் மங்கை உமைபங்கன்
யார்க்கும் பரிவில் அருள்செய்வான்
...ஐயன் கழல்கள் பணிவாரின்
சீர்க்கும் பாடல் செவிமாந்தும்
...செய்யன் விழைவாய் அமர்கோவில்
ஆர்க்கும் பொன்னி அலைமோதும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....3

வெளியில் ஆடல் புரிகின்றான்
....விரிஞ்சன் மால்முன் அழலாகி

ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற

...உமையோர் பங்கன் புகழ்பாடத்
தெளியும் ஞானம் பெறவைக்கும்
 ...திங்கள் சூடி அமர்கோவில்   
 அளிகள் முரலும் பொழில்சூழும்
 ...ஆவூர்ப் பசுப தீச்சரமே....4

காடும் மலையும் வான்வெளியும்
...கழலன் ஆடும் களமாகும்
ஈடு வேறொன் றில்லாத
...இறைவன் அடியார் நீரிலிட்ட
ஏடும் எதிர்க்க அருள்வான்வீற்
...றிருக்கும் கோவில் தென்காற்றில்
ஆடும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....5

 தசையைச் சுடுகான் தழலாடும்
...தனியன் மங்கை பங்குடையான்
விசமும் அமுதாய் விண்ணவர்க்காய்
...விரும்பி உண்ட ஈசனவன்
வசமும் ஆவான் அன்பினுக்கே
...மேவும் கோவில் வளிதவழ
அசையும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....6

எந்த துன்பம் வந்திடினும்
...எந்தை நாமம் சிந்திப்பார்
முந்து வினையும் நீங்கிடவே
...மூழ்கு சுழலாம் பவம்விடுப்பான்
சந்த இசைப்பாத் தமிழ்மாந்தும்
...தழலன் மேவி உறைகோவில்
அந்தண் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....7

படையும்
  அழலும் கரம்கொண்டான்
...பதமாய் ஆடல் புரிந்திடுவான்
விடையில் ஊர்ந்தே வந்திடுவான்
...விரும்பும் அடியார் துயர்தீர்ப்பான்
சடையன் மேவி அமர்கோவில்
...தவழும் காரார் மேகமெலாம்
அடையும் சோலை நிறைந்திருக்கும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....8

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு
பொடியார் மேனி புளகிக்க
...புடைசூழ் அடியார்க் கருளீசன்
கடிமா மதில்மூன் றெரிசெய்த
...கழலன் மேவி உறைகோவில்
அடியார் பலரும் வந்தேத்தும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....9

பிணியாய் வினைசெய் இடர்தீர்க்கும்
...பெம்மான் நின்ற ஊரர்தான்
பணிவாய் மனத்துள் அமைத்ததளி
...பரிவாய் அமர்ந்தே அருளியவன்
துணியாய்ப் பிறையை முடிகொண்டான்
...தொண்டர் துணைவன் உறைகோவில்
அணியார் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....10

No comments:

Post a Comment