August 11, 2013

திருச்சிராப்பள்ளி


(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

பாவல் நாவலர் பாடிப் பரவிடும்
தேவ .னைத்தொழு தேயடை நெஞ்சமே
கோவில் நெஞ்சினில் கொண்ட அன்பரின்
சேவ மர்பதி தென்சிராப் பள்ளியே. ...1

பாவென் றந்தமிழ்ப் பாடலைப் பாடியே
தாவென் றால்தரும் தாளடை நெஞ்சமே
நோவென் றேவரும் நொய்வினை
த் தீர்க்கும்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே....2

கேட தைச்செய் கெடுவினை நீங்கிட
ஆட கத்தாள் அடையஎண் நெஞ்சமே
நாட கன் தருக் கீழ்மறை ஓதிய
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே....3


குலையும் வண்ணம் கொடுந்துயர் செய்வினை
இலையென் றேகிட எண்ணிசெல் நெஞ்சமே

கலைமிகு மஞ்சார் கவினுறு வெண்பனிச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே....4

கன்னல் வில்லினன் காமனைக் காய்ந்தவன்
பொன்ன லர்த்தாள் புகலடை நெஞ்சமே
என்ன துன்பிலும் இன்னருள் செய்பவன்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே....5


பூத்த நாண்மலர்ப் பொற்கொன் றையணிவான்
சீர்த்த நற்றாள் தெளிந்தடை நெஞ்சமே

ஆர்த்த லைத்திழி ஆற்றைச் சடைக்கொளும்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே....6

வல்வி .னைத்துயர் மாய்ந்திட வேண்டியே
நல்வி தம்தொழ நத்திடு நெஞ்சமே
அல்லி ருட்தழல் ஆடுவான் ஆலமர்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே....7

இட்ட மாயமர்ந் தின் தமிழ் மாந்துவன்
நட்டம் செய்கழல் நத்திடு நெஞ்சமே
சுட்ட நீறணித் துய்யன் தண்ணருட்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே....8

பேய வள்பெரும் பேறுடை அன்பினள்
தாயென் றானைச் சரணடை நெஞ்சமே
தூயன் தாள்முடி தோன்றா(து) உயர்ந்திடும்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே....9


மெய்யில் பங்குடை மீன்விழி யாளுமை
ஐயன் பூந்தாள் அடையஎண் நெஞ்சமே
கையில் மான்மழு தீயுடன் காத்தருட்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே....10

No comments:

Post a Comment